துங் ஷின் மருத்துவமனை வளாகத்துக்குள் கூடிய பெர்சே 2.0 பங்கேற்பாளர்களைக் கலைக்கும் நோக்கத்துடன் அந்த மருத்துவமனையின் பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தின் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இரசாயனம் கலக்கப்பட்ட நீர் பாய்ச்சப்பட்டது என சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறிக் கொண்டுள்ளார்.
“மிகவும் குழப்பமான சூழ்நிலைகளில்” கண்ணீர் புகைக் குண்டுகளும் புகையை எழுப்பும் குண்டுகளும் வீசப்பட்டதை அந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சு ஆய்வு காட்டியதாக அதன் நிறுவனத் தொடர்பு இயக்குநர் ஜைலானி ஹஷிம் கூறினார்.
அவர் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவிடம் பேசினார்.
“எங்கள் கண்டுபிடிப்பின் படி, போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்,” என கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி கோலாலம்பூர் சாலைகளில் நடத்தப்பட்ட பெர்சே 2.0 பேரணியின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது பற்றி விசாரிக்கும் சுஹாக்காம் குழுவிடம் அவர் சொன்னார்.
“கண்ணீர் புகைக் குண்டுகள் மூலம் எழுந்த புகை, காற்று வீசியதால் மருத்துவமனைக்குள் கொண்டு செல்லப்பட்டது. அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. காற்று வீசும் திசையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது,” என ஜைலானி சொன்னார். அந்தச் சம்பவத்தை புலனாய்வு செய்த உயர் நிலை அமைச்சுக் குழுவின் செயலாளர் என்னும் முறையில் அவர் அந்த விசாரணையில் கலந்து கொண்டார்.
மருத்துவமனை வளாகத்துக்குள் கண்ணீர் புகைக் குண்டுகளும் நீரும் பாய்ச்சப்பட்டதை தொடக்கத்தில் மறுத்த போலீஸும் சுகாதார அமைச்சும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் பரவலாக வெளியானதைத் தொடர்ந்து தங்கள் நிலையை மாற்றிக் கொண்டன.