“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்றதாக NFC தலைவர்மீது குற்றம் சுமத்துக”

நேசனல் ஃபீட்லாட் கார்பரேஷன் (NFC) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலைக் கைது செய்து போலீசுக்கும் எம்ஏசிசி அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சுமத்த வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக்கொண்டிருக்கிறது.

 
“முகம்மட் சாலே (ஷாம்சுபரின் இஸ்மாயிலுக்கு) வழங்கிய ரிம1.755மில்லியன் போலீஸ், எம்ஏசிசி அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டதாகும் என்பதை சில வட்டாரங்கள் மூலமாக பிகேஆர் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

 “ஷாம்சுபரின்,முகம்மட் இஸ்மாயிலுக்கு உடந்தையாக இருந்த ஒரு இடைத்தரகர் மட்டுமே.

“ஷாம்சுபரின் ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட பணத்தை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்”, என்று  பிகேஆர் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

என்எப்சி மீதான விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில் வழங்கப்பட்ட பணம் அது. 

2009 எம்ஏசிசி சட்டம் பகுதி 4(16), 4(17)-இன்கீழ் முகம்மட் சாலேமீது குற்றம் சுமத்தப்பட்டால் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் என்று ரபிசி கூறினார்.

அச்சட்டம், இடைத்தரகர் வழியாகவோ மற்றவர்களின் மூலமாகவோ கையூட்டுக் கொடுக்க முனையும் ஒருவரும் குற்றவாளியே என்கிறது.

போலீசுக்கு அணுக்கமான வட்டாரங்கள் இதைக் கட்சிக்குத் தெரிவித்ததாக ரபிசி குறிப்பிட்டார்.

இதற்கான ஆதாரம்,ஷாம்சுபரின் கையூட்டுடன் அணுகிய புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி  செய்த போலீஸ் புகாரில் உள்ளது என்றாரவர். என்எப்சி தலைவரிடம் பதிவுசெய்த வாக்குமூலமும் இதை உறுதிப்படுத்தும்.

ஆனால், இப்போது என்னவென்றால் ஷாம்சுபரின் ஒரு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். முகம்மட் சாலேயை ஏமாற்ற முனைந்தார் என்று அவர்மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஷம்சுபரின் முகம்மட் சாலேயை ஏமாற்ற முனைந்தார் என்று குற்றம் சாட்டி என்எப்சி முறைகேடுகள் மொத்தத்துக்கும் அவரே காரணம் என்று பழியை அவர்மீது போடுவதற்கு ஒரு நாடகம் ஆடப்படுவதுபோல் தெரிகிறது என்று ரபிசி குற்றம் சுமத்தினார்.

எம்ஏசிசி வழக்காடு பகுதித் தலைவர் அப்துல் ரசாக் மூசா, ரிம1.755மில்லியன், “யாரையோ வளைத்துப்போடுவதற்கான” பணம் என்றுதான் முதலில் கருதப்பட்டது என்றும் ஆனால் விசாரணைகளில் அது உண்மையல்ல என்பது தெரிய வந்ததாகக் கூறினார்.