யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரம் கோரி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு போலீசார் நான்கு வீடியோ ஒளிநாடாக்களை இணையத்தில் சேர்த்துள்ளனர்.
PDRMsia என்னும் பயனாளி அந்த வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில் சேர்த்துள்ளார்.
ஒவ்வொரு வீடியோவும் ஒரு நிமிடம் முதல் இரண்டரை நிமிடம் வரை ஒடுகின்றன.
எல்லா வீடியோக்களும் பின் வரும் வாசகங்களுடன் தொடங்குகிறது: “அனைத்து மலேசியர்களுக்கும், எதிர்காலத் தலைவர்கள் இது போன்று நடக்க வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா? பெற்றோர்களுக்கும், இத்தகைய நடவடிக்கைகளில் உங்கள் பிள்ளைகள் சம்பந்தப்படுவதைக் காண நீங்கள் விரும்புகின்றீர்களா? பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இத்தகைய நடவடிக்கைகளில் பங்கு கொள்வதின் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புகின்றீர்களா?”
புத்தாண்டு தினத்துக்கு முதல் நாள் இரவு யூபிஎஸ்ஐ வளாகத்தின் முக்கிய நுழைவாயில் மூடப்பட்டுள்ள வேளையில் மாணவர் குழு ஒன்றின் நடத்தையை அந்த ஒளிப்பதிவுகள் காட்டுகின்றன.
“15 நிமிடங்களுக்குள்” கலைந்து செல்லுமாறு அங்கு கூடியுள்ள மாணவர்களின் தலைவர் ஒருவருடன் போலீஸ் அதிகாரி ஒருவர் பேச்சு நடத்துவதை ஒரு வீடியோ காட்டுகிறது. ஆனால் கலைந்து செல்ல மாணவர்கள் மறுத்து விட்டனர்.
மாணவர்கள் தோரணங்களைத் தயாரிப்பதும் அந்த ஒளிநாடாவில் தெரிகிறது. அப்போது கலைந்து செல்லுமாறு மாணவர்களுக்கு உரத்த குரலில் போலீசார் ஆணையிடுகின்றனர்.
ஆனால் வீடியோ அத்துடன் நின்று விடுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் நகர்ந்த பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் காட்டப்படவில்லை.
ஜனவரி மாதம் முதல் தேதி அதிகாலையில் போலீசாருடன் நிகழ்ந்த கைகலப்பில் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
காலை மணி 2.40 வாக்கில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் நிகழ்ந்த கைகலப்பின் போது Kumpulan Aktivis Independen Mahasiswa (Kami) அமைப்பின் தலைவர் ஹாஸிக் அப்துல்லா அப்துல் அஜிஸ் மயக்கமடைந்தார். அதே வேளையில் Gerakan Menuntut Kebebasan Akademik (Bebas) அமைப்பின் தலைவர் முகமட் சாப்வான் அவாங், காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த நண்பர் ஒருவருக்கு உதவி செய்த போது தாம் அடிக்கப்பட்டதாக சாப்வான் ஒரு நாளைக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
போலீசார் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதற்கான ஆதாரம் மாணவர்களிடம் இருப்பதாக அவர்களைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் நாட்வா பிக்ரி கூறினார்.