பினாங்கு என்ஜிஓகளின் போக்கு முதல்வருக்குப் புரியவில்லை

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், சுயேச்சையாக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் அரசுசாரா அமைப்புகள் சில, மாநில அரசின் கொள்கைகளைக் குறைசொல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டங்களின்போது அவற்றின் பிரதிநிதிகள் விவகாரங்களைப் புரிந்துகொண்டவர்கள்போலத்தான் காணப்படுகிறார்கள்.ஆனால், அதன்பின்னர் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அந்தப் புரிதலைப் பிரதிபலிக்கவில்லை.

“கண் இருந்தும் அவர்களால் பார்க்க முடியவில்லை போலும்.  அவர்களையும் அனுசரித்துத்தான் போக வேண்டியுள்ளது.” பினாங்கு முனிசிபல் கவுன்சிலர்களின் பதவியேற்பு நிகழ்வில்  உரையாற்றிய  லிம் இவ்வாறு கூறினார்.

தாம் உள்பட, பல்வேறு மாநிலத் தலைவர்களையும் ஊழல் பேர்வழிகள் என்று அடிக்கடி அவை கூறி வருவதாக லிம் குறிப்பிட்டார். ஆனால், அதை பினாங்கு மக்கள் நம்புவதில்லை. அதில், தமக்கு நம்பிக்கை உண்டு என்றாரவர்.

“நம் (அரசியல்) எதிரிகள் அப்படிச் சொன்னால் புரிந்துகொள்ளலாம்,  ஆனால் என்ஜிஒ-கள் அப்படிச் சொல்கின்றன. நம்மையும் கடந்தகாலத் தலைவர்கள்போல் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்”, என்று லிம் கூறினார்.

“அவர்களைக் குறைகூற முடியாது. பழைய நிர்வாகத்தில் நீண்ட காலம் இருந்து விட்டார்கள்-அது தூய்மையற்ற, அழுக்குப்பிடித்த ஒரு நிர்வாகம். காலம்தான் நம் நேர்மையை நிரூபிக்க வேண்டும். இந்த நான்காண்டுகளில் நாம் செய்துள்ளதை மக்கள் பாராட்டுகிறார்கள்”, என்றாரவர்.