901 பேரணி பற்றி போலீஸுடன் விவாதிக்க பிகேஆர் தயார்

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கோரியிருப்பதைப் போல அடுத்த திங்கட்கிழமை பேரணி அமைதியாகவும் ஒழுங்காகவும் நிகழ்வதை உறுதி செய்ய போலீஸுடன் கலந்துரையாட பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தயாராக இருக்கிறார்.

அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமையும் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரமும் ஜனநாயக, சுதந்திர நாட்டின் அங்கங்கள் என இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார். அவர் கோம்பாக் எம்பி-யும் ஆவார்.

“ஆகவே 901 பேரணி சுமூகமாக நிகழ்வதை உறுதி செய்யும் பொருட்டு அது குறித்து பிகேஆர்-உடனும் பக்காத்தான் ராக்யாட்-டுடனும் விவாதிக்க போலீஸ் ஆயத்தமாக இருப்பதைக் காட்டும் ஹிஷாமுடின், தேசியப் போலீஸ் படைத் தலைவர் அறிக்கைகளை நான் வரவேற்கிறேன்,” என அஸ்மின் சொன்னார்.

சீர்திருத்தத்துக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் பொருட்டு திங்கட்கிழமை நிகழும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அவர் அனைத்து பக்காத்தான் உறுப்பினர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

கோலாலம்பூரில் அன்றைய தினம் கூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பொது மக்கள் ஆகியோருடைய பாதுகாப்பு உட்பட பொதுப் பாதுகாப்பை நிலை நிறுத்துமாறு பிகேஆர் போலீசாரை தொடர்ந்து கேட்டுக் கொள்ளும்.

யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris-லும் பெர்சே 2.0 பேரணியிலும்  நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாது என நாங்கள் நம்புகிறோம்.”

அரசியல் உருமாற்றத்தை அமலாக்கப் போவதாக பிரதமர் அளித்துள்ள வாக்குறுதிக்கு இணங்க போலீஸ் தோற்றத்தை சரி செய்து கொள்ளவும் போலீஸ் மீது பொது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைக்கவும் உள்துறை அமைச்சருக்கும் தேசியப் போலீஸ் படைத் தலைவருக்கும் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு இது என அஸ்மின் மேலும் வலியுறுத்தினார்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் அடுத்த திங்கிட்கிழமை தீர்ப்பு வழங்கும் போது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் கோலாலம்பூரில் ஒன்று திரட்டப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது.

அந்தப் பேரணி சட்ட விரோதமானது என போலீசார் அறிவித்துள்ள போதிலும் அந்த நிகழ்வு அமைதியான முறையில் நிகழும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்குமாறு நேற்று ஹிஷாமுடின் பேரணி ஏற்ப்பட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

“2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்டச் சட்ட உணர்வுக்கு ஏற்ப தமது கூற்று இருப்பதாகக் குறிப்பிட்ட ஹிஷாமுடின், பொது ஒழுங்கை பாதுகாப்பதும் நிலை நிறுத்துவதும் போலீசாருக்கு முக்கியமான கடமை என்றார்.”

அவரது செய்தியை தி ஸ்டார் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.

தாங்கள் திட்டமிடுகிற எதுவும் மற்றவர்களுடைய பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என்பதை ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளிப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.