சிலாங்கூரைக் கைப்பற்றுவதில் ஒத்துழைக்க கீர் நிபந்தனை

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, சிலாங்கூரைத் திரும்ப கைப்பற்றும் முயற்சியில் பிஎன் சகாக்களுடன் ஒத்துழைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால், அதற்குமுன்  தம்மைச் சிறைக்குள் தள்ள சதி செய்யும் மூன்று அமைச்சர்கள் அவர்களின் சதிச்செயலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அம்மூவரும் தம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுவதை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியிடம் கூறினார்.

குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவர்களின் ‘சதித்திட்டத்தை’ அம்பலப்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.

“அவர்களின் பெயர்களை இன்றோ நாளையோ எதிர்காலத்திலோ வெளியிட மாட்டேன். ஆனால், அவர்கள் என்னை மாட்டிவிட  முயல்கிறார்கள்  என்பதற்கு என்னிடம் வலுவான சான்றாதாரம் இருக்கிறது.

“அவர்களை நான் அறிவேன். அவர்களை எச்சரிக்கவே இதைச் சொன்னேன்….. சதித்திட்டம் யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். என்னிடம் நம்பத்தக்க ஆதாரம் உண்டு. சந்தேகம் வேண்டாம்”, என்று அவர் கூறியதாக சின் சியு தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை தமது வலைப்பதிவிலும் கீர்  இது பற்றி  எழுதியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் தம்மைச் சிறைக்கு அனுப்ப அமைச்சர்கள் மூவர் சதி செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கீர் மந்திரி புசாராக இருந்தபோது குறைந்த விலைக்கு ஒரு மாளிகை வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதற்கு எதிராக அவர் எதிர்வாதம் செய்ய அண்மையில்  உத்தரவிடப்பட்டது.

இதனிடையே அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன், கீர் தம் கூற்றை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், அவரின் அம்னோ சகாக்கள் கீர் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர் அவ்வாறு பேசியிருப்பதற்கு வருத்தமும் தெரிவித்தனர்.

2008 மார்ச் பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரை பக்காத்தானிடம் இழந்ததற்குக் காரணமே கீர்தான் என்று பரவலாகக் கூறப்படுகிறது.

அதனாலேயே கீர் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு கட்சித் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டார். பின் நஜிப், தமக்கு உதவியாக நோ ஒமாரைத் துணைத் தலைவராக நியமனம் செய்தார். நோ ஒமாரும் கீரும் பரம வைரிகள்.

சிலாங்கூரில் பிஎன் வெற்றிபெற்றால் மந்திரி புசார் ஆவதற்கு நோ அடிபோடுவதாகவும் கூறப்படுகிறது.