அம்னோ உயர் தலைவர்களே என் எதிரிகள் என்கிறார் அன்வார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நெகிரி செம்பிலானில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அம்னோ உயர் தலைவர்களின் பலவீனங்களை எடுத்துக் காட்டி சாடினார்.

“அம்னோ உறுப்பினர்களும் கீழ் நிலையில் உள்ள அம்னோ தலைவர்களும் என் எதிரிகள் அல்ல. அம்னோ உயர் தலைவர்களே என் மீது எல்லாக் கோணங்களிலிருந்தும் அவதூறுகளை இடைவிடாமல் வீசி வருகின்றனர்.”

“மக்கள் பணத்தைத் திருடியவர்களே அந்தத் தலைவர்கள். அவர்கள் ஊழலிலும் தரகுப் பணத்திலும் மாடுகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். இன வாதத்தைப் பயன்படுத்துவதே அம்னோவின் ஒரே ஆயுதமாகும். அது அதனைக் கொண்டு பல்வேறு இனங்களையும் பிளவுபடுத்துகிறது.”

“மலாய்க்காரர்களிடையே நிலவும் வறுமைக்கும் அவர்கள் ஒரங்கட்டப்படுவதற்கும் அம்னோவே காரணமாகும்.  அந்தத் தோல்விகளுக்கு யார் பொறுப்பு?

“பிரதமர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர் ஆகிய அனைவரும் அம்னோவைச் சேர்ந்த மலாய்க்காரர்கள்,” என அந்தப் பேரணியில் கூறிய போது அங்கு இருந்த ஆயிரம் பேரும் பலமாக கை தட்டினர்.

நடப்பு பிஎன் அம்னோ அரசாங்கத்தில் நிகழும் அனைத்து முறைகேடுகளிலிருந்தும் மலேசியர்களை விடுவிப்பதற்கு அம்னோ தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அன்வார் கூறினார்.

பேரணி இடையூறு ஏற்படுத்தாது

பின்னர் மலாக்காவில் இன்னொரு நிகழ்வில் பேசிய அன்வார், தமக்கு தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று நீதிமன்றத்துக்கு வெளியில் கூடும் “அன்வார் விடுதலைக்கான 901” பேரணி எத்தகைய கலவரத்தையும் ஏற்படுத்தாது என உறுதி அளித்தார்.

அந்த பேரணி கடந்த கால நிகழ்வுகளைப் போல் களங்கத்துடன் முடியாமல் நல்ல உணர்வோடு முடிய வேண்டும் என அவர் வேண்டிக் கொண்டார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போலீசார் உட்பட யாரும் கலவரத்தை ஏற்படுத்தவோ தூண்டி விடவோ அனுமதிக்காமல் இருப்பதுதான் முக்கியம்.”

“தவறான குற்றச்சாட்டுக்கள், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகவும் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் நாடு முழுவதும் தொழுகைகள் நடத்தப்படும் என்ற தகவலையும் அன்வார் வெளியிட்டார்.

அந்த நிகழ்வில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், பாஸ் மலாக்கா ஆணையர் அட்லி ஸாஹாரி  உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

“நாம் வெற்றி அடைவோம் என நான் உறுதியாக நம்புகிறேன். நாளை இல்லை என்றாலும் அடுத்த சில மாதங்களில் நாட்டில் பெரிய மாற்றங்கள் நிகழும்.”

“அவர்கள் என்னைத் தண்டிக்கட்டும். எதிர்வரும் தேர்தலில் மக்கள் அம்னோவைத் தண்டிப்பர் என நாம் பிரார்த்தனை செய்வோம்.”

“ஜனவரி 9ம் தேதி நாம் நீதிமன்றத் தீர்ப்பை செவிமடுப்போம். ஆனால் நமது கவனம் பொதுத் தேர்தலில் இருக்க வேண்டும்.’

“அன்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் தேர்தலே முதலிடம் பெற வேண்டும். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் தேர்தலே முதலிடம் பெற வேண்டும். இறுதியில் இந்த அரசாங்கத்தை வீழ்த்த மக்களே முடிவு செய்வார்கள்,” என்றார் அன்வார்.