பெர்க்காசா, பக்காத்தான் 901-உடன் மோதுவதற்கு திட்டமிடுகிறது

“தேசிய அமைதியை பாதுகாப்பது” என்னும் பெயரில் பெர்க்காசா, திங்கட்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள பக்காத்தான் ராக்யாட் பேரணியை முறியடிப்பதற்கு கோலாலம்பூரில் உள்ள டூத்தா நீதிமன்ற வளாகத்தில் வெளியில் போட்டிப் பேரணியை நடத்தும்.

பெர்க்காசா உறுப்பினர்கள் அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு அமைந்துள்ள கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு ஊர்வலமாக செல்வர் என அதன் தலைவர் இப்ராஹிம் அலி கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.

“நாங்கள் சிறப்புத் தொழுகைகளை நடத்துவோம். இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு வலிமையைக் கொடுக்குமாறு நாங்கள் அல்லாஹ்-வைக் கேட்டுக் கொள்வோம்.”

“அதற்குப் பின்னர் நாங்கள் ஊர்வலமாக செல்வோம். தங்கள் தலைவரைத் தார்மீக ரீதியில் தற்காக்க தயாராக இருக்கும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அவரது ஆதரவாளர்களுடன் நாங்கள் மோதினால் நாங்கள் ஒன்றாக ஆத்திரமூட்டுவோம்,” என அவர் சொன்னதாகவும் அந்த ஏடு கூறியது.

அந்தப் பள்ளிவாசலிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை காலையில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

எதிர்த்தரப்புத் தலைவருடன் தங்களது ஒருமைப்பாட்டைக் காட்டுவதற்காக அதே தினத்தில் 100,000 பேரைக் கோலாலம்பூரில் திரட்டப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது.

அதிகாரிகள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்ட இப்ராஹிம் இரண்டுமே சட்டவிரோதக் கூட்டங்கள் என்பதால் பெர்க்காசா அல்லது போட்டி கூட்டத்தைக் கலைப்பது போலீசாரைப் பொறுத்தது என இப்ராஹிம் சொன்னார்.

“நாங்கள் அமைதியைப் பாதுகாக்க விரும்புகிறோம். அதுதான் எங்கள் பலம்.”

“அதற்கு நேர்மாறாக அவர்கள் அதனை சீர்குலைக்க விரும்புகின்றனர். தார்மீகப் பிரச்னைக்காக தங்கள் தலைவரைத் தற்காக்க விரும்புகின்றனர்,” என அந்த பாசிர் மாஸ் எம்பி சொன்னார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி பெர்சே 2.0 பேரணி நிகழ்வதற்கு முன்னதாக அந்தத் தேர்தல் சீர்திருத்த இயக்கத்துக்கு எதிராக போட்டி பேரணியை நடத்தப் போவதாக இப்ராஹிம் மருட்டினார்.

ஆனால் மலாய்க்காரர்களிடையே மோதல் நிகழ்வதைத் தவிர்க்க விரும்புவதாக காரணம் காட்டி கடைசி நேரத்தில் அதனை மீட்டுக் கொண்டார்.

TAGS: