உத்துசான் அன்வாருடைய இன்னொரு முன்னாள் தோழரைக் களமிறக்குகிறது

நாடு கடந்து வாழும் வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினை அடுத்து அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாருக்கு எதிராக அவருடைய இன்னொரு முன்னாள் தோழரை- இப்போது அன்வாருடைய சமய நம்பிக்கைகளை இலக்காகக் கொண்டு பேட்டி கண்டுள்ளது.

அபிம் எனப்படும் Angkatan Belia Islam Malaysia அமைப்பை அன்வாருடன் இணைந்து தோற்றுவித்த இஸ்லாமிப் போராளியான இஸ்மாயில் மினா என்பவரே அவர் ஆவார். தமது முன்னாள் தோழர் பல சமயத் தன்மையை ( religious pluralism) ஆதரிப்பதாக இஸ்மாயில் அந்தப் பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். அந்த அமைப்பின் இரண்டாவது தலைவராக அன்வார் பணியாற்றியுள்ளார்.

அன்வாரும் இஸ்மாயிலும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த போது அவர்களிடையே நட்பு மலர்ந்தது. இஸ்மாயில் மலாயாப் பல்கலைக்கழக  முஸ்லிம் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். அப்போது அன்வார் அதன் குழு உறுப்பினராக இருந்தார்.

அந்த மூத்த பிகேஆர் தலைவருடைய சில நம்பிக்கைகள் இஸ்லாமிய சமயத்துக்கு பாதகமானவை என அறிந்ததும் அன்வாரை இஸ்மாயில் புறம் தள்ளியதாக அந்த மலாய் நாளேடு குறிப்பிட்டது.

“பல சமயத்தன்மை இஸ்லாத்திலிருந்து விலகிச் செல்வதற்கு வழி வகுத்து விடும் என்பதால் நான் அன்வாரிடமிருந்து விலக முடிவு செய்தேன்,” என அவர் சொன்னாதாக அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ள முழுப் பக்க பேட்டியில் காணப்படுகிறது.

பல சமயத்தன்மை என்பது எல்லா சமயங்களையும் ஒரே நிலையில் வைப்பதாகும். அனைத்து சமயங்களும் சமநிலையில் செல்லத்தக்கவை எனவும் அது கருதுகிறது.

தற்போது Muafakat என அழைக்கப்படும் Pertubuhan Muafakat Sejahtera Masyarakat Malaysia அமைப்பில் குழு உறுப்பினராக இஸ்மாயில் இருந்து வருகிறார்.

அன்வாரை விடுவிப்பதற்காக பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்துள்ள 901 பேரணியில் பொது மக்கள் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். காரணம் தனி நபர் ஒருவருக்காக தனது ஆதரவாளர்கள் போராடுவதை இஸ்லாம் கண்டிக்கிறது என்றார் அவர்.

திங்கட்கிழமை நிகழும் அன்வார் ஆதரவுப் பேரணியில் கலந்து கொள்வதிலிருந்து பொது மக்களைத் தடுப்பதற்கு உத்துசான் மலேசியா அன்றாடம் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அந்தப் பேரணியில் 100,000 பேர் பங்கு கொள்வர் என பக்காத்தான் ராக்யாட் எதிர்பார்க்கிறது.

பல சமயத்தன்மை பெரிய பாவம்

கடந்த வார இறுதியில் உத்துசான் பிரபலமான வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினுடன் நடத்தப்பட்ட பேட்டியை வெளியிட்டது. அன்வார் பிரதமராவதற்குத் தகுதி இல்லாதவர் என்றும் அவர் ஒரினச் சேர்க்கையில் வேட்கை உள்ளவராகவும் இருக்கலாம் என அவர் அதில் அன்வாரை வருணித்துள்ளார்.

2010ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி London School of Economics என்ற கல்லூரியில் நிகழ்த்திய உரையில் அன்வார் பல சமயத்தன்மையை வலியுறுத்தியதாக இஸ்மாயில் இன்றைய பேட்டியில் கூறிக் கொண்டார்.

அன்வாருடன் தொடர்புடைய சிந்தனைக் களஞ்சியமான Institut Kajian Dasar (IKD) வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் தாராளமய பலதரப்பட்ட சித்தாந்தங்களை வலியுறுத்துவதாக கூறி இஸ்மாயில் தமது வாதத்திற்கு வலிமை சேர்த்தார்.

அன்வாருக்கு இன்னும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமியத் தலைவர்களையும் அவர் சாடினார்.

“கடந்த காலத்தில் நாங்கள் அபிமில் இருந்த போது அர்ஹாம் ( Arqam) என்ற தவறான போதனைகளைப் பின்பற்றும் அமைப்பு என நாங்கள் நிராகரித்தோம். ஆனால் அவர் இஸ்லாமிய சமயத்துக்கு முரணான கருத்துக்களைச் சொல்கிறார், எழுதுகிறார். இருந்தும் அவர்கள் இன்னும் அன்வாரை பாதுகாக்க விரும்புகின்றனர்.”

“சமயத்தைத் தற்காப்பது அவர்களுடைய போராட்டத்தின் நோக்கமா அல்லது சமயத்தை சீர்குலைக்கும் ஒரு நபரைத் தற்காப்பதா? என இஸ்மாயில் வினவியதாக உத்துசான் குறிப்பிட்டுள்ளது.