பிகேஆர்:அம்னோ சொல்லிக்கொடுத்ததை ஹசன் அலி ஒப்புவிக்கிறார்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, 901 அன்வார் விடுதலை பேரணி குறித்து சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஹசன் அலி தெரிவித்த கருத்துகளைச் சாடியுள்ளார்.பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் நாளான திங்கள்கிழமை அப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஹசன் அலியின் கண்களும் இருதயமும் குருடாகி விட்டன. அம்னோ சொல்லிக்கொடுத்ததை அவர் ஒப்புவிக்கிறார்”, என்று நேற்று தம் டிவிட்டர் பக்கத்தில் அஸ்மின் குறிப்ப்பிட்டிருந்தார்.

ஹசன் அப்படி என்ன சொன்னார் என்பதை அஸ்மின் விவரிக்கவில்லை.ஒருவேளை, ஒரு தனிமனிதருக்காக நடத்தப்படும் அப்பேரணியைத் தம் மனசாட்சி ஏற்கவில்லை என்று ஹசன் குறிப்பிட்டதன் தொடர்பில் அஸ்மின் அவரைச் சாடியிருக்கலாம்.

இதனிடையே, சிலாங்கூர் மந்திரி புசார், ஹசனைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் டிவிட்டரில் கூறியிருப்பது பற்றியும் கருத்துரைத்த அஸ்மின், “ஏன் அம்னோ அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறதா?”, என்று கிண்டலடித்திருந்தார்.