தாங்கள் “தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்” என பதிவு செய்யப்பட வேண்டும் என பிரிட்டனில் வேலை செய்யும் ஆறு மலேசியக் குடி மக்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டாக்டர் தியோ ஹுன் சியோங் சமர்பித்த அந்த விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹானா யூசோப், அந்த அறுவரையும் “தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்” எனப் பதிவு செய்யாததின் மூலம் சரியான முறையில் நடந்து கொண்டுள்ளதாக கூறினார்.
வி வினேஎஷ், பரம்ஜித் சிங், யோலாந்தா சிட்னி அகஸ்டின், சிம் சூ வெய், கியோங் சீ சீ ஆகியோர் மற்ற விண்ணப்பதாரர்கள் ஆவர்.
“2002ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு தொடர்பான தேர்தல் விதிமுறைகளின் கீழ் “தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்” மீது முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) இருக்கிறது,” என ரோஹானா சொன்னார்.
ஆகவே ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியுள்ள இசி-யை தவறு செய்துள்ளதாகக் கூற முடியாது. அதனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது,” என்றும் ரோஹானா குறிப்பிட்டார்.
இராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், முழு நேர மாணவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர் ஆகியோர் மட்டுமே “தொகுதியில் இல்லாத வாக்காளர்கள்” என தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியுள்ளது.
அதில் தனியார் துறையில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மலேசியக் குடி மக்கள் சேர்க்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட ஆறு மலேசியர்களும் அதன் கீழ் வருகின்றனர்.
அந்த வழக்கு விசாரணையில் பார்வையாளராக மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த ஆணையர் டெட்டா சாமான் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதால் அந்த முடிவு குறித்துத் தாம் வருத்தமடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
நீதிபதி எழுப்பிய நுட்பமான விஷயங்களை அங்கீகரித்த அவர் சுஹாக்காம் அது குறித்து மேலும் ஆராயும் என்றார்.
அந்த ஆறு விண்ணப்பதாரர்களையும் பிரதிநிதித்த வழக்குரைஞர் எட்வர்ட் சோ, தமது வாடிக்கையாளர்களிடம் மேல் உத்தரவை நாடப் போவதாகத் தெரிவித்தார். என்றாலும் இன்றைய முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்து கொள்ளப்படும் என்றார் அவர்.