இருதய  அறுவை சிகிச்சையும் இனவாதமும் 

அண்மையில்  மாரா தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் (Universiti Teknologi Mara (UiTM) இருதய  அறுவை சிகிச்சை  கல்விக்கு (cardiothoracic surgeons)  மலாய்க்காரர்  அல்லாதவர்கள்  அந்த துறையில்  பயிற்சி பெற  அனுமதிக்க  கூடாது  என்ற  விவாதம்  மலாய்காரர்கள் இடையே  தோன்றியுள்ளது.

தற்பொழுது  நாட்டில்  இருதய அறுவை சிகிச்சை செய்யும்  மருத்துவர்கள்  மிக குறைவாக  உள்ளனர்.  இந்த நிலையில்  இருதய அறுவை சிகிச்சைக்காக  காத்திருக்கும்  நோயாளிகள்    இந்த துறை சார்ந்த மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லாததால்  ஏறக்குறைய  அவர்கள்  இறப்பை  நோக்கி  வாழ வேண்டிய சூழலில் உள்ளனர்.

இதற்கான  வழிமுறை  அதிகமான  இருதய அறுவை சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களை உருவாக்க வேண்டியதாகும்.

இந்தத் துறையை சார்ந்த  படிப்புக்கு  மாரா பல்கலைக்கழகம்  ஒரு மருத்துவத் துறையை அமைத்துள்ளது. எனவே தேவையின் அடிப்படையில் அந்த துறையில்  பயில்வதற்கு  போதுமான  மருத்துவர்கள்  அனுமதிக்கப்பட வேண்டும்.

இதில்  பங்கெடுக்க  மலாய்காரர்களை சார்ந்த  போதுமான மருத்துவர்கள் இல்லாத சூழலில்  மற்ற இனங்களை சார்ந்த  மருத்துவர்கள்  இந்த  துறையை  தேர்வு செய்ய  விருப்பம் கொண்டிருப்பினும், ஒரு சாரார் மாரா தொழில்நுட்ப  பல்கலைக்கழகம்  மலாய் இனத்திற்கு மட்டும்தான் பிற இனங்களுக்கு அல்ல  என்று போர் கொடி தூக்கியுள்ளனர்.

இதன் பின்னணியில்  ஒரு  தெளிவான  சிந்தனை அவர்களிடையே இன்னும் பிறக்காதது வேதனைக்குறியது.

நமது நாட்டில்  போதுமான  இருதய அறுவை சிகிச்சை  நிபுணர்களை  உருவாக்குவதற்கு  போதுமான  மருத்துவர்கள் தேவை.  இந்த வகையில்  போதுமான  பூமி புத்ரா  மருத்துவர்கள் கிடைக்காத சூழலில்  இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை உருவாக்க  பூமி புத்திரா அல்லாத மருத்துவர்களுக்கு  வாய்ப்பை வழங்குவதுதான் புத்திசாலித்தனமாக கருதப்படும்.

காரணம்  இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும்  ஒரு நோயாளி  எந்த மதத்தை சார்ந்தவர்  அல்லது எந்த இனத்தை சார்ந்தவர்  என்பதை வைத்து அவருக்கு சிகிச்சை அளிப்பது கிடையாது.  மருத்துவர்களின் பணி  நோயை நிவர்த்தி செய்ய மனிதர்களுக்கு மருத்துவம் பார்ப்பதாகும்.

அப்படிப்பட்ட ஒரு புனிதமான  தொழிலில் இனவாத அடிப்படையில்  இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை உருவாக்க வேண்டுமானால்  அந்த பயிற்சிக்கு  பூமிபுத்ரா  மருத்துவர்களுக்குத்தான் அந்த நிபுணத்துவ பயிற்சியை கொடுக்க வேண்டும்  அதை  மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பது  சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது.

மலேசியா  விடுதலை அடைந்து  66 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்தச் சூழலில்  நாம் இன்னமும்  தேசிய உணர்வும்  பரந்த மனப்பான்மையும்  இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கும் மன உறுதியும்  இல்லாமல், இன்னமும்  இனவாதத்திலேயே  உழன்று  நம்மை நாமே  முட்டாளாக்கிக் கொள்வது  ஒட்டுமொத்தமாக  ஒரு சிந்தனை தெளிவற்ற  போக்காகும்.

இந்த சூழலில்  ஒரு சில அரசியல் தலைவர்கள்  இனவாதத்தையும்  மதவாதத்தையும்  முன்னிலைப்படுத்தி  தங்களின்  அரசியல் நோக்கத்திற்காக  புனிதமான தொழிலாக இருக்கும்  மருத்துவ தொழிலில்  அதை  அமுலாக்க  துடிப்பது  மிகவும்  அருவருப்பாக உள்ளது.

ஒரு மருத்துவர்  ஒரு நோயாளியை கவனிக்கும் பொழுது  அவர்  ஒரு மானிடத் தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். பல வேளைகளில் மருத்துவர்கள்தான் நோயினால் துயர்றும் மனிதர்களுக்கு கடவுள் என்ற உவமையும் உண்டு.

அரசாங்கம் இந்த விசயத்தில் ஒரு பரந்த நோக்கத்துடன் செயல் படுவது முக்கியமாகும். பெரும்பான்மையான மக்கள், குறிப்பாக மலாய் இனத்தை சார்ந்தவர்கள், அரசாங்க மருத்துவச் சேவையை நாடுபவர்கள். இனவாத அடிப்படையில் செயல்பட்டால் அதன் வழி உண்டாகும் பாதிப்பு ஏழ்மை நிலையில் இருக்கும் அனைவருக்கும் அதிகமாகும்.