பள்ளிவாசலில் ஏடாகூடம் வேண்டாம், பக்காத்தானுக்கு பெகிடா எச்சரிக்கை

மலாய்  என்ஜிஓ-வான பெகிடா, 901 பேரணி நடத்தும்போது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் ஏடாகூடமாக நடந்துகொள்ளக்கூடாது என்று பக்காத்தானை எச்சரித்துள்ளது.

“அமைதிப் பேரணி நடத்துகிறீர்களா, நடத்துங்கள். ஆனால் பள்ளிவாசலில் வந்து தொல்லை கொடுக்கக்கூடாது. அதை பெகிடா பார்த்துக் கொண்டிருக்காது”, என்று பெகிடா உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் ஷியாரில் அப்துல் அசீஸ் கூறினார்.

திங்கள்கிழமைப் பேரணி தொடர்பில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் அவர், கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் பள்ளிவாசலில் சமய விரிவுரைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு இடையூறு செய்தல்கூடாது…எங்கள் உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில்  அங்கிருப்பர்.”

அவர் குறிப்பிடும் பள்ளிவாசல், பக்காத்தான் பேரணி நடக்கும் டுடா நீதிமன்ற வளாகத்திலிருந்து 300மீட்டர் தொலைவில்  உள்ளது.

பள்ளிவாசல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமையும் தொடரும் என்று கூறிய ஷியாரில், அது சனிக்கிழமை பிரதமருடன் அந்த அமைப்பு நடத்தும் சந்திப்பின் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது என்றார். அது நீண்டகாலத்துக்குமுன்பே திட்டமிடப்பட்ட ஒன்று.

“நாங்கள் ஊர்வலம் செல்லப்போவதில்லை. பள்ளிவாசலுக்க்குள்ளேயே இருப்போம். எந்தச் சினமூட்டும் செயலிலும் ஈடுபட மாட்டோம். பெகிடா- உறுப்பினர் அல்லாதார் பள்ளிவாசலில் வந்து தொந்திரவு கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்றாவர்.

பேரணிக்கும் பெகிடா அமைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனாலும், பேச்சு நடத்த போலீசார் தங்களை அழைத்திருந்ததாக ஷியாரில் கூறினார்.