901 ஆர்ப்பாட்டத்தில் சேர வேண்டாம் என வெள்ளிக்கிழமை தொழுகை உரை எச்சரிக்கிறது

தெரு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதின் மூலம் “மோசமான தவறை” செய்ய வேண்டாம் என கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைகளில் கலந்து கொண்டவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாட்டாளர்களுடன் “ஒத்துழைக்கின்றவர்கள்’, “முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டுக்கும் எதிராக கடுமையான தவறைச் செய்கின்றனர்” என ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை தயாரித்துள்ள வெள்ளிக்கிழமை தொழுகை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை ஒட்டி அவருடைய ஆதரவாளர்கள் அன்றைய தினத்தில் பேரணி  நடத்த திட்டமிட்டுள்ள வேளையில் அந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பெர்சே 2.0 போன்ற பேரணிகளுக்கு முன்னதாகவும் இதே வழி முறை பின்பற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வெள்ளிக்கிழமை தொழுகை உரை கூட்டரசு அமைப்பான ஜாக்கிமின் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

“தீவிரமான நடவடிக்கைகள் உண்மையான இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானவை” என அந்த உரையில் குறிக்கப்பட்டுள்ளது.

“பொய்கள், பண்பாடுகளை மாசுபடுத்துவது, ஊடகங்கள் இணையம் வழியாக தவறான கருத்துக்களை பரப்புவது ஆகியவை மூலம் இன்று பொறுப்பற்ற சக்திகள் முஸ்லிம் ஐக்கியத்தையும் தேசிய அமைதியையும் கீழறுப்புச் செய்து வருகின்றன. அதனால் அவை சட்டத்தையும் மீறுகின்றன.”

“சட்ட விரோதக் கூட்டங்கள், தெரு ஆர்ப்பாட்டங்கள் உட்பட எல்லா வகையான தந்திரங்கள் மூலமும் அவை நீண்ட காலமாக நிலவி வருகின்ற அமைதியைச் சீர்குலைக்க முயலுகின்றன,” எனவும் அந்த வெள்ளிக்கிழமை தொழுகை உரை குறிப்பிட்டது.

அந்தச் சக்திகள் “எழுச்சியை வலியுறுத்தும் சுலோகங்களை முழங்குவதின் மூலம் தலைவர்களை வெறுக்குமாறு மக்களைத் தூண்டுகின்றன”, என்றும் அது மேலும் கூறியது.

மலேசியாவில் நிலைத்தன்மை சீர்குலைந்துள்ளது என்னும் தோற்றத்தை உலகிற்கு காட்டும் தங்களது தனிப்பட்ட நோக்கத்தில் வெற்றி காண அந்த சக்திகள் “நீதி, வெளிப்படையான போக்கு” என்னும் முகமூடியையும் “மக்களைத் தங்களது கேடயமாகவும்” பயன்படுத்துகின்றன.

அந்தத் தொழுகை உரை இஸ்லாமிய வரலாற்றையும் மேற்கோள் காட்டி, ஐக்கியத்தையும் அமைதியையும் சீர்குலைக்க முயன்ற கபடதாரிகள், யூதர்கள் தலைமை தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகள்” விடுத்த மிரட்டலையும் முகமட் நபி எதிர்நோக்கியதாக மேலும் கூறியது.

முகமட் நபியின் எதிரிகள் குறிப்பாக உகுட் போரின் போது பயன்படுத்திய தந்திரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும் அடங்கியிருந்ததாக அது தெரிவித்தது.

ஜனவரி 9ம் தேதி நீதிமன்ற வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் அன்வார் ஆதரவாளர்கள் ஒன்று கூடுவதற்குப் போலீஸ் இன்று அனுமதி அளித்துள்ளது.

அதே வேளையில் அந்த இடத்துக்கு அருகில் உள்ள கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசல் வளாகத்துக்குள் பெர்க்காசா கூடுவதற்கும் போலீஸ் அனுமதி அளித்தது.