சிலாங்கூர் மலாய்க்காரர்களை மதம் மாற்றும் நோக்கத்துடன் கிறிஸ்துவர்கள் அமைத்த சிறப்பு கிறிஸ்துவ “மத மாற்ற” குழு, பெட்டாலிங் ஜெயா, கிளானா ஜெயா வட்டாரங்களிலும் அவற்றைச் சுற்றிலும் இயங்கி வருவதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி எச்சரித்துள்ளார்.
அவர் விடுத்த எச்சரிக்கை வருமாறு:
“அவர்கள் (கிறிஸ்துவர்கள்) பௌத்த மதத்தினரை மதம் மாற்றுவது எளிது என்பதை அறிந்துள்ளனர். தாவோ சமயத்தினரை, கன்பூசியஸ் பிரிவினரை மாற்றுவது எளிது என்றும் அறிந்துள்ளனர்.”
“ஆனால் முஸ்லிம்களைக் குறிப்பாக மலாய்க்காரர்களை மதம் மாற்றுவது சிரமம் என்பதை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.”
“அதனால் அவர்கள் சிலாங்கூர் மலாய்க்காரர்களை மதம் மாற்றுவதற்கு சிறப்புப் பிரிவை அமைத்துள்ளனர்.”
பாங்கியில் நேற்றிரவு அல் ஹாசானா பள்ளிவாசலில் ஹசான் அந்தத் தகவல்களை அறிவித்தார்.
மதம் மாற்ற நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பில் சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை ஏற்பாடு செய்துள்ள ஆய்வரங்கில் ஹசான் பேசினார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புனிதப் போரின் போது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவப் போராளிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டை, உருவான பகைமை ஆகியவற்றின் விளைவாக அந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் காரணம் கூறினார்.
“கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த பூசலான புனிதப் போரின் எஞ்சியுள்ள பகுதியே அதுவாகும். அவர்கள் தங்கள் இழப்பை ஈடு கட்ட வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் அவர்கள் மலேசியாவில் பெரும்பாலும் மலாய்க்காரர்களாக இருக்கும் முஸ்லிம்களை மதம் மாற்றுவதின் வழி அதனைச் செய்கின்றனர்.”
அந்த சிறப்புப் பிரிவில் உலகம் முழுவதையும் சேர்ந்த மிகுந்த அர்ப்பணிப்புத்தன்மையும் கடப்பாடும் கொண்ட கிறிஸ்துவ தொண்டர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மலாய்க்காரர்களை மதம் மாற்றுவதற்குத் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர்.”
“அவர்கள் கொரியா, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து உட்பட உலகம் முழுவதிலிருந்தும் வந்துள்ளனர். அவர்கள் குறைந்தது ஒர் ஆண்டுக்கு அதுவும் தங்கள் குடும்பங்களையும் மனைவியரையும் வேலைகளையும் விட்டு விட்டு இங்கு தங்கியிருக்க முன் வருகின்றனர்.”
நன்கு தேர்ச்சி பெற்ற அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சக மத போதகர்கள் உதவி செய்கின்றனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.