கி. சீலதாஸ் – ஒவ்வொரு நபருக்கும் தனது சமய அடையாளத்தை வெளிப்படுத்தவும் அதன் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றவும் உரிமையுண்டு என மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் 11(1)ஆம் பிரிவு தெளிவுபடுத்துகிறது.
அதோடு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுவோர் மத்தியில் பிற சமய தத்துவங்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடு விதிக்கும் சட்டங்களை மாநில அரசும் கூட்டரசு பிரதேசங்களுக்கு நடுவண் அரசும் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளதை அரசமைப்புச் சட்டத்தின் 11(4)ஆம் பிரிவு விளக்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?
முஸ்லிம்கள் மத்தியில் பிற சமயத்தினர் தங்கள் சமயத்தைப் பற்றி எந்தப் பிரச்சாரமும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிலையை உறுதிப்படுத்துவதோடு மற்ற சமயங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் இஸ்லாத்தைப் பரப்பும் நடவடிக்கைக்கு எந்தத் தடையும் கிடையாது. இதுதான் உண்மையான நிலவரம்.
ஒரு சமயத்தில் இருந்து வேறொரு சமயத்திற்கு மாறுவது நெடுங்காலமாக நடைமுறையில் நிலவும் பழக்கம்தான். எனினும், அப்ராஹாம் வழித்தோன்றல்கள் பிற சமயத்தினர் தங்கள் சமயத்திற்குக் கவரும் நடவடிக்கைகளில் இயங்குவது ஒன்றும் புதிதல்ல.
மலேசியாவின் சமயம் இஸ்லாம் என அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவு கூறுவதோடு மற்ற சமயங்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் பின்பற்றப்படுவதை அனுமதிக்கிறது. இஸ்லாத்துக்குப் போதுமான பாதுகாப்பு இருப்பதை நாம் காண்கிறோம்.
பிற சமயங்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாக அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய போதிலும் நடைமுறையில் அந்தப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் முறையில் சிலர் நடந்து கொள்வது சமயங்கள் இடையே நல்லிணக்கத்தை வளர்க்கவும் வலிமை பெறவும் உதவவில்லை என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது.
மலேசியாவில் சமயப் பிரச்சினைகள் தலையெடுக்கக் கூடாது என்ற பேச்சும் அறிவுரையும் அடிக்கடி வருவது ஒன்றும் புதிதல்ல. காலங்காலமாக வலியுறுத்தப்படும் கருத்து. ஆனால், நல்லிணக்கத்திற்கான பாதை கரடு முரடாக இருப்பதைக் காண மறுப்பது பல சமயங்களிடையேயும் பல இனங்களிடையேயும் நல்லெண்ணத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்க்க உதவாது. கசப்பான அனுபவங்கள் தான் நம்மை வருத்திக் கொண்டே இருக்கும்.
பல ஆண்டுகளாக இஸ்லாத்தைத் தழுவிய இந்து கணவன் தம் இந்து மனைவியின் அனுமதியின்றி பதினெட்டு வயது தேராத பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மாற்றிய பிரச்சினை பெரும் வேதனை நிறைந்த சூழ்நிலைக்குத் தாய்மார்களை உட்படுத்தியதை நாடு அறியாதது அல்ல.
அரசமைப்புச் சட்டத்தின் 12(4)
அரசமைப்புச் சட்டத்தின் 12(4) ஆம் பிரிவின்படி பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் மதம் மாற்றம் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பிரிவு ஆங்கிலச் சொல்லான “பெயரன்ட்” என்று குறிப்பிட்டிருப்பதானது ஒருமையில் இருக்கிறது. எனவே, இரு பெற்றோர்களில் ஒருவரின் அனுமதி போதும் என்று வாதிட்டவர்கள் உண்டு.
அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. “பெயரன்ட்” என்ற சொல் ஒருமையில் இருந்தாலும் 1948 & 1967 ஆம் ஆண்டுகளின் பொருள் விளக்கச் சட்டத்தின் படியும் அரசமைப்புச் சட்டத்தின் 160ஆம் பிரிவைப் பதினொன்றாம் அட்டவணையின் படி ஒருமையில் பயன்படுத்தப்பட்ட சொல் பன்மையை உள்ளடக்கியது எனத் தெளிவுபடுத்துகிறது.
இவ்வளவு தெளிவான சட்ட விளக்கம் இருக்கும் போது ஒரு இந்து தந்தை மட்டும் இஸ்லாத்துக்கு மாறியதும் தன் பதினெட்டு வயதைத் தேராத பிள்ளையை எப்படி சமய மாற்றத்துக்கு உட்படுத்த முடியும்?
சட்டப்படி முடியாது. சட்டத்தைப் புரிந்து கொள்ள வியாக்கியானம் செய்தால் நீதிக்கு மதிப்பளிக்கப்பட்டிருக்கும். ஆனால், இஸ்லாத்தில் தந்தைக்கு மிகுந்த பொறுப்பு உண்டு என்பதால் பதினெட்டு வயது தேராத தன் பிள்ளையை இஸ்லாத்துக்கு மாற்ற முடியும் எனத் தவறான பாதையில் சென்றனர்.
இந்த வாதத்தின்படி இஸ்லாம் சொல்வதைப் பின்பற்றினால் போதும். அதாவது தந்தையின் பொறுப்பு முக்கியமானது. எனவே, அந்தப் பொறுப்பை இஸ்லாத்துக்கு வந்த தந்தை நிறைவேற்ற வேண்டும் என உணர்ச்சி மிகுந்த கருத்து சில நீதிபதிகளைத் தவறான தீர்ப்புக்குப் போகும் வழியைக் காட்டியது.
பெற்றோர் என்றால் “கணவன் மனைவி”
இங்கே இரண்டு அரசமைப்புச் சட்டத்தின் புறநிலை பொருளைப் புரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்கக் கூடாத அணுகுமுறையாகும்.ஒன்று, அரசமைப்புச் சட்டத்தின் 4(1)ஆம் பிரிவு தெளிவாகப் பிரகடனப்படுத்துவது என்ன தெரியுமா? “இந்த அரசமைப்புச் சட்டம்தான் கூட்டரசின் உயரிய சட்டம்.” இதன் பொருள் என்ன? மலேசியாவில் எந்தச் சட்டமாக இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்துக்கு ஈடாகாது. இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தின் 12(4)ஆம் பிரிவை 160ஆம் பிரிவு மற்றும் பதினொன்றாம் அட்டவணையோடு இணைத்துப் படிக்கும் போது பதினெட்டு வயது தேராத பிள்ளையின் சமயத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு மட்டும்தான் உண்டு.
பெற்றோர் என்றால் “கணவன் மனைவி” இருவரின் ஒப்புதலோடுதான் பதினெட்டு வயது தேராதவர்களை இஸ்லாத்துக்கு மாற்ற முடியும். இந்தக் கருத்தைத் தான் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் இந்திரா காந்தி வழக்கில் தீர்மானித்தது. அந்த வழக்கில் இந்திரா காந்தியும் அவர் கணவனும் இந்துக்கள். அந்தச் சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பெற்றோரும் ஆனார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு, கணவர் இஸ்லாத்திற்கு மாறினார். கூடவே தன் பிள்ளைகளையும் அந்த மதத்திற்கு மாற்றிவிட்டார். அதை எதிர்த்து தொடுத்த வழக்கில் இந்திரா காந்தி வெற்றி கண்டார். பதினெட்டு வயது தேராத பிள்ளைகளின் மதப் போதனையைப் பற்றிப் பெற்றோர்கள் இருவரும் முடிவு செய்ய வேண்டும் என்றது நாட்டின் உச்ச நீதிமன்றம்.
இந்திரா காந்தி வெற்றி பெற்ற போதிலும் ஒரு குழந்தையை மட்டும் இன்றுவரை அவரிடம் ஒப்படைக்கவில்லை. அது ஒரு பிரச்சினையாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினை நீடிக்கலாமா? நீடிக்கவிடலாமா என்பதே கேள்வி!
அதற்கு விடை தரும் பொறுப்பு யாரிடம் இருக்கிறது? காவல்துறையிடம் இருக்கிறது. அரசு வாளா இருக்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண முடியாமல் இருக்கும் போது மற்றுமொரு பிரச்சினை எழுந்துள்ளது.
சிறுவர்களை, அதாவது பதினெட்டு வயது தேராத சிறுவர்களை எப்படி இஸ்லாத்துக்கு மாற செய்வது? இது முறையான செயலா? சட்டம் அனுமதிக்காத போது இப்படிப்பட்ட தவறான பாதையில் போவோரைக் காவல் துறை என்ன செய்யப் போகிறது?
குற்றத்தைப் பகிரங்கமாகச் செய்யும் போது
பதினெட்டு வயது தேராதவர் எவராக இருந்தாலும் அவரின் பெற்றொர் மட்டும்தான் அந்த இளைஞரின் சமயத்தைத் தீர்மானிக்க முடியும். இதுதான் சட்டம். 1981ஆம் ஆண்டு சுசி தியோ எங்க ஹாவர்ட் வழக்கில் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துவிட்டது. சட்டம் அனுமதிக்காத செயலைச் செய்யும்படி தூண்டுவது குற்றமல்லவா?
இந்த நாட்டு குடிமக்களும் சரி குடியுரிமை பெறாதவர்களும் சரி அவர்கள் யாவரும் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ வேண்டும். பள்ளிக்கூடத்திற்குப் போகும் பிள்ளைகள் மதச் சார்பற்ற கல்வியைப் பெற அனுப்பப்படுகிறார்கள்.
அதாவது மொழி, கணிதம், சரித்திரம், நிலயியல் போன்றவைகளைக் கற்கும் போது அவர்களைச் சமய மாற்றத்திற்குத் தயார்படுத்துவது பெற்றோர்களுக்குப் பலத்த சங்கடத்தை ஏற்படுத்தும். இந்தச் சங்கடத்தை ஏற்படுத்துவது ஒரு சிலர். அதற்கு ஆதரவாகச் செயல்படுவோர் ஏராளம்.
அரசு இதில் கவனம் செலுத்தி தகாத இந்த மத மாற்ற முறையைத் தடுக்க வேண்டும். எல்லா பெற்றொர்களும் மத மாற்ற அச்சமின்றி வாழ உதவுவது அரசின் கடமை.