புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் அளப்பெரிய நம்பிக்கையில் அன்வார்

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,இவ்வாரம் எத்தனையோ நேர்காணல்களைக் கொடுத்துவிட்டார். அதைக் கண்ணுறும் எவரும் இனி இந்த மனிதரிடத்தில் பேசுவதற்கு விசயம் இருக்காது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அவரிடம் விசயத்துக்குப் பஞ்சமே இருப்பதில்லை.

நேற்று மலேசியாகினிக்கு நேர்காணல் கொடுத்தபோது கலகலப்பாகப் பேசி உற்சாகத்துடன் காணப்பட்டார் அன்வார். திங்கள்கிழமை  குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என்ற கவலை கிஞ்சித்தும் அவரிடம் இல்லை.

குதப்புணர்ச்சி வழக்குத் தீர்ப்புக்கூட ஒரு சரியான நேரத்தில் வருவதாகத்தான் தோன்றுகிறது. அன்வார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு ஆதரவு மேலும் பெருகும் என்றுகூட அக்கூட்டணித் தலைவர்களும் ஆதரவாளர்களும் கிண்டலடித்துப் பேசிகொள்கிறார்கள்.

திங்கள்கிழமை தீர்ப்பு எப்படியோ தெரியாது. ஆனால், பொதுத் தேர்தலில் “புத்ரா ஜெயாவை கைப்பற்றும் அளவுக்குக்” கூடுதல் இடங்களை பக்காத்தான் வெல்லும் என்ற நம்பிக்கை மட்டும் அவரிடம் மிதமிஞ்சி இருக்கிறது.

பேராக்கும் நெகிரி செம்பிலானும் பக்காத்தான் கைக்கு வரும் என்றவர் நம்புகிறார்.ஜோகூரிலும் மலாக்காவிலும் பக்காத்தானின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த பிஎன் கடும் முயற்சியில் இறங்க வேண்டியிருக்கும்.

ஆனாலும், அவ்விரு மாநிலங்களிலும் கூடுதல் இடங்கள் பக்காத்தானுக்கு கிடைக்கும் என்கிறார் அன்வார். அதேபோல் சாபா, சரவாக்கிலும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் நம்பிக்கை அதற்கு நிறையவே உண்டு.

அன்வார் இப்ராகிம், மலேசியாகினிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

அடுத்த பொதுத் தேர்தலில் எந்தெந்த மாநிலங்கள் பக்காத்தானுக்குப் பிரச்னைக்குரிய மாநிலங்களாக இருக்கும்?

தெற்கில் நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்கள்தான். மலாக்காவும் ஜோகூரும் பெரும் பிரச்னையாக இருக்கும். ஜோகூரில் ஊடுருவுவது சிரமமாகத்தான் இருக்கிறது. 

அதற்காக எங்கள் கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை என்று சொல்ல முடியாது.வருகிறார்கள். மூவாரில் 4,000பேர் வந்தனர். மூவாருக்கு அது பெரிய கூட்டம்தான்.ஆனால் அது ஒரு விதிவிலக்கு.லெடாங்கிலும் நல்ல கூட்டம்தான். ஆனால், அங்கு சென்றடைவதுதான் சிரமம். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

2008-ஐவிட நிலைமை மேம்பட்டுள்ளதா என்று கேட்டால், நிச்சயமாக ஆமாம் என்பேன். கெஅடிலான் மட்டுமல்ல, ஜோகூரின் நகர்ப்புறங்களில் டிஏபியின் கட்டமைப்பும் வலுவடைந்துள்ளது. பாஸ் புதுப்புது பகுதிகளில் எல்லாம் ஊடுருவி வருகிறது. (ஜோகூர் பிகேஆர் தலைவராக டாக்டர் சுவா) ஜுய் மெங், பொறுப்பேற்ற பின்னர் கெஅடிலான் இயந்திரம் வலுவடைந்துள்ளது. 2008-இல் இருந்ததைவிட இப்போது நிலைமை எவ்வளவோ மேம்பட்டுள்ளது.  

பிறகு சாபா, சரவாக். சரவாக்கில் டாயாக்குகள் வாழும் மூன்று நான்கு இடங்களில், சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளும் உள்ளன.அதை வைத்து அங்கு பெரும்பான்மை இடங்களை வெல்ல முடியும் என்று சொல்ல முடியுமா? முடியாது. நடப்பு நிலவரத்தை வைத்துப் பார்த்தால் 30-40 விழுக்காட்டு இடங்கள் கிடைக்கலாம். சாபாவில் வேறு விதமான கதை.

மலாக்காவையும் ஜோகூரையும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

அப்படிச் சொல்லவில்லை. ஜோகூரில் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றுதான் சொன்னேன். மலாக்காவில் கணிசமான இடங்கள் கிடைக்கும். நெகிரி செம்பிலானில் சிரமமே இருக்காது.

அப்படியானால், நெகிரி செம்பிலானைக் கைப்பற்றுவீர்கள்?

ஆம்.  

பினாங்கு பக்காத்தானுக்குத்தான் என்று உறுதியாக சொல்ல முடியுமா?

உறுதியாகச் சொல்ல முடியும். பினாங்கு எங்களுக்குத்தான். 

பெர்காசா-அம்னோ  ஆட்கள் (பினாங்கு முதல்வர் லிம்) குவான் எங் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வருகிறார்கள். ஆனால், அது எடுபடுவதில்லை.பினாங்கை குவான் எங், நன்றாக வைத்திருக்கிறார்.

மலாய்க்காரர்களுக்கு அவர் ஒரு சீனர், டிஏபி என்பது தெரியும். அவர் சொல்வதை, டிஏபி-இன் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை, ஆனாலும் அவரை நம்பிக்கைக்குரிய தலைவராக பார்க்கிறார்கள்.

கெடா, கிளந்தானில் நிலைமை எப்படி?

கிளந்தானில் பாஸ் நீண்டகாலம் இருந்துவிட்டது.அதனால், மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்களோ, என்னவோ?

தோக் குரு நிக் அசீசிடம் தனித் திறம் உண்டு. அவருக்கு வயதாகிவிட்டது, நீண்ட காலம் இருந்து விட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அகப்பட்டதையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொள்வோர் நிறைந்த அரசியல் உலகில் அவர் கைச் சுத்தம் மிக்கவர், யாரையும் ஏமாற்றாதவர்….. 

ஆனாலும் அவருக்கு வயதாகிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள், அதனால் அவரும் திட்டமிட வேண்டும் (பணி ஓய்வுபெற).அதே நேரத்தில் அவருக்குப் பின் வரப்போகும் அணியை உருவாக்குவதிலும் அவர் கவனமாக செயல்பட வேண்டும்.அது நம்பிக்கைக்குரிய அணியாக இருத்தல் வேண்டும்.

நிக் அசீசுக்கு வயதாகிவிட்டது, அவர் நோயுற்றிருக்கிறார்.அதனால் இனியும் பதவியில் இருக்கக்கூடாது என்று நினைப்போர் இருக்கக்கூடும்.

ஆனால், அப்படிப்பட்ட நினைப்பு பெருவாரியாக இருக்கிறதா என்பது எனக்கு உறுதியாக தெரியாது.ஆனால், நேர்மைக்காகவும் நல்ல நிர்வாகத்துக்காகவும் அவரது சேவை இன்னும் தேவைதான் என்று நினைப்போரும் உண்டு.

கெடா நிலவரம் எப்படி?

அங்கு சில பகுதிகளில் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டது பிரச்னையை உண்டுபண்ணியுள்ளது.அதைப் பற்றி உஸ்தாத் ஹாடி(பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்)யுடன் விவாதித்தேன்.இருவரும் அசிசானுடன்(கெடா எம்பி அசிசான் அப்துல் ரசாக்) அது பற்றிப் பேசுவோம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், 80 விழுக்காடு மலாய்க்காரர் வாழும் இடத்தில் மதுக்கடை தேவையில்லை.ஆனால், மலாய்க்காரர்-அல்லாதார் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி பிரச்னைகளை உண்டுபண்ணக்கூடாது.

இப்படி சிலவற்றைத் தவிர்த்து கெடாவில் வேறு பிரச்னை இல்லை. 

பேராக்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியுமா?

முடியும். ஆய்வுகளும் கருத்துக்கணிப்புகளும் முடியும் என்பதைதான் காண்பிக்கின்றன.

கெடாவுக்கே திரும்பிச் செல்வோம். அங்கு  சீனர் சமூகத்தினருடன் அடிக்கடி பிரச்னை ஏற்படுவது ஏன்?

பாஸ்தான் அங்கு பெரும்பான்மை கட்சி. அதனால்   சூதாட்டம், மது போன்ற விவகாரங்கள் அங்கு அடிக்கடி எழத்தான் செய்யும். அதைத் தவிர்க்க இயலாது. இதற்கு முஸ்லிம்களும் சீனர், இந்திய சமூகங்களும்தான் கூடிப் பேசி நியாயமான தீர்வு காண வேண்டும். 

இருக்கும் நிலைமை அப்படியே தொடர வேண்டும் என்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மது விற்கக்கூடாது என்பதற்குப் பொருத்தமான காரணங்கள் இருக்குமானால், நிச்சயமாக அவர்கள் அதை ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன். இது நடக்க முடியாது என்பதில்லை.

பகாங்கில் நிலைமை எப்படி இருக்கும்?

கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அம்னோவுக்கும் விவகாரங்களை விளக்கிச் சொல்வது பெரும் பிரச்னையாக இருக்கிறது. மக்களிடம் நாட்டின் பற்றாக்குறை பற்றிப் பேசினால் எடுபடாது. மாடுகள் பற்றியும் ஆடம்பர கொண்டோக்கள் பற்றியும் ஸக்காத் பணம் பற்றியும் ஷாம்பூ திருடியதற்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை கிடைப்பது பற்றியும் கீர் தோயோவுக்குக் கிடைத்த தண்டனை பற்றியும் பேசினால்தான் அங்கு எடுபடும்.

ஆக, வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெறும் என்கிறீர்கள்?

அன்வார், குற்றவாளி என்று நினைப்பவர்கள் குற்றவாளியாகத்தான் நினைப்பார்கள். குற்றவாளி அல்ல என்று நினைப்பவர்கள் குற்றவாளி அல்ல என்றுதான் நினைப்பார்கள். அக்கருத்தை நீதிபதியின் தீர்ப்பு மாற்றிவிடாது. ஒரு சிறு எண்ணிக்கையினரிடையே வேண்டுமானால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில், புத்ரா ஜெயாவை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு நிறைய இருப்பதுபோல் தெரிகிறது.

வெல்வோம் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு. நான் சிறைக்குள் தள்ளப்பட்டால் அது எங்களுக்கு ஆதரவாக கூடுதல் புள்ளிகளைப் பெற்றுத் தரும். அதாவது கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.நான் சிறைக்குச் செல்லாவிட்டாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.பெரும்பான்மை வேண்டுமானால் சற்றுக் குறையலாம்.

(தம் அனுபவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார்)…பகாங்கில் தொலைவில் உள்ள இடங்களுக்கெல்லாம் சென்று மாற்றம் தேவை என்பது பற்றிப் பேசி வருகிறோம்.நேற்றிரவு ஒரு சுவையான நிகழ்வு. ஓர் இளைஞர் என்னை விரட்டிக் கொண்டு வந்து, “நான் அம்னோ இளைஞர் பகுதி உறுப்பினன்”, என்றார். இதை ஏன் நம்மிடம் சொல்கிறார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, “நான் சத்தியமாக சொல்கிறேன். என் ஆதரவு உங்களுக்குத்தான்”, என்றார். அதைக் கேட்டு மனம் உருகிவிட்டது.