அனைத்து இந்து ஆலயங்களுக்கும் ஜனவரி இறுதிக்குள் வழி காட்டிகள் வழங்கப்படும்

இந்த மாத இறுதிக்குள் இந்த நாட்டில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களும் வழி காட்டிகளைப் பெறும் என மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர் எஸ் மோகன் ஷான் இன்று அறிவித்துள்ளார்.

ஒர் ஆலயம், சடங்குகளை பாதுகாப்பதற்கு உதவியாக பின்பற்ற வேண்டிய பொருத்தமான விதிமுறைகள் அந்த வழிகாட்டிகளில் அடங்கியிருக்கும் என அவர் சொன்னார்.

“இது வரை ஆலயங்கள் பின்பற்றுவதற்கு பொருத்தமான வழிகாட்டிகள் ஏதும் கிடையாது. அதனால் தாங்கள் விரும்பும் நேரத்தில் எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் சுயேட்சையாக நடத்தி வந்துள்ளன.”

“ஒர் ஆலயம் எப்படி அமைக்கப்பட வேண்டும், எந்த ஆலயம் எந்தப் பூஜையை நடத்த வேண்டும், ஒர் ஆலயத்தை எப்படி நிர்வாகம் செய்வது ஆகியவை மீது நாங்கள் வழிகாட்டிகளை கொண்டு வருகிறோம்,” என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

அந்த வழிகாட்டிகள் மற்ற அம்சங்களுடன் இந்த நாட்டில் அனைத்து ஆலயங்களும் சமூக சேவையை தொடங்குவதற்கு ஊக்கமூட்டும் எனவும் மோகன் ஷான் சொன்னார்.

கோவில் நிர்வாகங்கள் சமயத்தையும் சடங்குகளையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. சமூகத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்றார் அவர்.

“அனைத்து இந்து சங்கத் தலைவர்களையும் சமய நிபுணர்களையும் உள்ளடக்கிய சமய ஆலோசனைக் குழு ஒன்று அந்த வழிகாட்டிகளை தயாரிக்கும்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் உள்ள 3,300 இந்து ஆலயங்களில் 2,000 மட்டுமே மலேசிய இந்து சங்கத்தில் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் மோகன் ஷான் தெரிவித்தார்.

“கோவில் விவகாரங்களைக் கவனிக்கும் ஒரே அமைப்பு மலேசிய இந்து சங்கம் என்பதால் அதில் உறுப்பினர்களாகுமாறு கோவில்களைக் கேட்டுக் கொள்ளுமாறு நாங்கள் எங்களுடைய உள்ளூர் மன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளோம்”, என்றார் அவர்.

பெர்னாமா