மெட்ரிக்குலேஷன் விவகாரத்தில் அன்வார்க்கு நெருக்குதல் தேவை!

இராகவன் கருப்பையா – இந்தியர்களின் மேம்பாட்டுக்காக வழங்கிய வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார் எனும் குறைபாடு நம் சமூகத்தினரிடையே நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது பலதரப்பட்ட இனிப்பு வாக்குறுதிகளை அவர் அள்ளித் தெளித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் பழைய கதைகளை பற்றிதான் அவர் பேசிக் கொண்டு இருக்கிறாரேத் தவிர நம் சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய முன்னெடுப்புகளை காணவில்லை எனும் விரக்தி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பல்வேறு துறைகளில் நாம் பின் தங்கியிருக்கும் போதிலும் நமது பிரதான கோரிக்கைகளில் ஒன்றான, நியாயமான உயர் கல்வி வாய்ப்புகளுக்காக நம் பிள்ளைகள் இன்னமும் ஏங்கித் தவிக்கின்றனர்.

மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் நம் பிள்ளைகளுக்கென போதிய இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை எனும் குறைபாடு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் ஒரு விவகாரமாகும். சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ள நம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் படும் அவலங்கள் சொல்லில் அடங்காது.

இந்த ஆண்டாவது நமக்காக அரசாங்கம் கண் திறக்காதா, வெளிச்சம் பிறக்காதா, என ஆண்டுதோறும் நாம் ஏங்கித் தவித்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.

அன்வார் மனம் வைத்தால் ஒரே நாளில்  இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, நம் சமூகத்தின் அபிமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை செதுக்கிக் கொள்ளலாம். எனினும் அவர் பாரா முகமாகத்தான் இருக்கிறார்.

நம் சமூகத்தினரிடையே சரிந்து கிடக்கும் அவருடைய செல்வாக்கை மீட்டெடுப்பதற்கு இவ்விவகாரத்தை சரியானதொரு சந்தர்ப்பமாக அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இவ்வாய்ப்பை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.’முன்னாள் பிரதமர்

நஜிப் மேற்கொண்ட துணிச்சலான ஒரு முன்னெடுப்பைப் போலான நடவடிக்கையொன்றை அன்வாரால் ஏன் மேற்கொள்ள முடியாது?’ எனும் கேள்வி எழவேச் செய்கிறது. ‘அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாமே’ என்பதுவே நம் ஆதங்கமாகும்.

தனது ஆட்சி காலத்தின் போது நம் பிள்ளைகளின் பரிதாப நிலையைக் கண்டு தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து மெரிக்குலேஷன் வகுப்புகளில் இடங்களை அதிகரிக்க நஜிப் வகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகுப்புகளில் உள்ள மொத்தம் 40,000 இடங்களில் 90% மலாய்க்கார மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் நம் பிள்ளைகளுக்கு 2000 இடங்கள் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்.

குறைவான தேர்ச்சி பெற்றுள்ள சக மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது, ஆனால் ’11ஏ’ பெற்றுள்ள தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என நம் இன மாணவர்கள் மன வேதனையுடன் கண் கலங்கி நிற்கின்றனர்.

தேர்தல் காலங்களில் வீர வசனம் பேசும் நம் இன அரசியல்வாதிகளும் கூட இப்போது மவுனமாகத்தான் உள்ளனர். பதினோரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நம் பிள்ளைகளுக்காக  இவ்விகாரததில் களமிறங்கி குரல் கொடுக்க யாரும் தயாராயில்லை என்பது வேதனை.

சீன மாணவர்களுக்கு பொருளாதார வசதியும் மற்ற கல்விக் கூடங்களில் நிறைவான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் இந்த மெட்ரிக்குலேஷன் வகுப்புகள் பற்றி அவர்கள் அவ்வளவாக கருதுவது இல்லை.

ஆனால் அங்குமிங்கும் பந்தாடப்படும் நம் மாணவர்களின் நிலைதான் பரிதாபம். அன்வார் பிரதமரானால் நம் கண்ணீருக்கெல்லாம் ஒரு முடிவு பிறக்கும் என்று எண்ணி ஏக்கத்தோடு காத்திருந்த நம் சமூகத்தினருக்கு எப்போதுதான் விடியல்?