மலேசியாவில் தாம் சுதந்திரமாக இயங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் நாடு கடந்து வாழ்வதை முடித்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பத் தயார் என பிரபலமான வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறுகிறார்.
அவர் நேற்று மலேசியாகினிக்கு மின் அஞ்சல் வழி அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
தமக்கு எதிராக கைது ஆணை ஏதும் இல்லை என்றாலும் தாம் தாயகம் திரும்பினால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (இசா) மீண்டும் கைது செய்யப்படலாம் என அவர் அஞ்சுகிறார்.
2001, 2008ம் ஆண்டுகளில் ராஜா பெத்ரா இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் மீது கிரிமினல் அவதூறு கூறியதாகவும் தேச நிந்தனை செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டிய பின்னர் தமக்கு நியாயமான விசாரணை கிடைக்காது எனக் காரணம் காட்டி நாட்டிலிருந்து அவர் வெளியேறினார்.
பின்னர் நீதிமன்றங்கள் அவருக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை இல்லாத விடுவிப்பை வழங்கின. அவர் தாயகம் திரும்பினால் அந்தக் குற்றச்சாட்டுக்களை மீண்டும் சுமத்த முடியும் என்பதே அதன் அர்த்தமாகும்.
அண்மையில் முக்கிய நாளேடு ஒன்றுக்கு தாம் வழங்கிய பேட்டியின் வழி தாம் எதிர்த்தரப்புக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுவதை ராஜா பெத்ரா மறுத்தார்.
“நான் எதிர்த்தரப்பை சேதப்படுத்த முடியாது. நான் அவ்வளவுக்கு வலிமையானவன் அல்ல. நான் எதிர்த்தரப்பை சேதப்படுத்த முடியும் என்றால் நான் பிரதமரை விட வலிமையானவனாக இருப்பேன். அவர் கூட எதிர்த்தரப்பை சேதப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளார்.”
“எதிர்த்தரப்பு சேதப்படுத்தப்படுவதற்கு ஒரே வழி அது, தனக்குத் தானே சேதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,” என சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அந்தப் பேட்டியில் ராஜா பெத்ரா கூறியிருந்தார். யார் அந்தப் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கடுமையான அந்த பேட்டி வெளியான பின்னர் தாம் உருவாக்கிய மலேசிய சிவில் உரிமை இயக்கத்திலிருந்து அதன் தலைவர் ஹாரிஸ் இப்ராஹிம் உட்பட பல உறுப்பினர்கள் வெளியேறி விட்டதாகக் கூறப்படுவதை ராஜா பெத்ரா மறுத்தார். அவர் இப்போது தாய்லாந்து சியங் மாய்-யில் இருப்பதாக நம்பப்படுகிறது.
“யாராவது வெளியேறி விட்டார்களா?” என அவர் வினவினார்.
என்றாலும் தாம் அடுத்த தரப்புக்கு தாவி விட்டதாக கூறப்படுவதையும் அந்த வலைப்பதிவாளர் நிராகரித்தார். 1974ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை நிகழ்ந்த 9 பொதுத் தேர்தல்களிலும் தாம் அம்னோவை அகற்றும் போராட்டத்துக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளதாக அவர் சொன்னார்.