இராகவன் கருப்பையா- நீண்ட நாள்களுக்குப் பிறகு அம்னோ தலைவர் ஒருவர் யதார்த்தமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது நமக்கு அச்சரியமாகத்தான் உள்ளது.
காலங்காலமாக அக்கட்சியின் ஆண்டுக் கூட்டங்களின் போது அதிகமான பேராளர்கள் ஆக்ரோஷமாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.
பீரங்கிப் போல முழங்கி பிற இனத்தவரை மானாவாரியாகச் சாடி தங்கள் இனத்தின் ‘ஹீரோ’க்களாகக் காட்டிக் கொள்வதில்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் இம்முறை அதன் உதவித் தலைவர்களில் ஒருவரான காலிட் நோர்டின் புத்திசாலித்தனமாக, நடைமுறைக்கு ஏற்றவாறு பேசியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதாவது, “அம்னோ முன்பு போல பலமிக்க ஒரு கட்சியல்ல. எனவே ஆதரவைத் தேடுவதற்கு பழைய மாதிரி சமயத்தையும் இனத்தையும் மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது”, என சாட்டையடித்தாற் போல மிகத் துணிச்சலாகப் பேசினார்.
“சமயத்தையும் இனத்தையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பது காலங்கடந்த ஒரு அரசியல் கருவி” என அவர் குறிப்பிட்டது பல பேராளர்களுக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.
ஏனென்றால் “மலாய்க்காரர்களின் அறிவாற்றலும் திறமையும் மட்டுமின்றி போட்டித்தன்மையும் அதிகரிக்க வேண்டும்” என்று அவர் ஆலோசனை கூறினார்.
போட்டித்தன்மை பற்றி பேசினால் பலருக்குப் பிடிக்காது. ஏனெனில் தங்களுடைய சிறப்புச் சலுகைகளுக்கு அதனை ஒரு சவாலாக அவர்கள் கருதுகின்றனர்.
எனினும் காலிட்டின் ஆலோசனையை ஏற்று அம்னோ உறுப்பினர்கள் இத்தகைய ஒரு மாற்றத்தைத் தழுவினால் பிற இனத்தவரின் ஆதரவையும் கூட அக்கட்சி மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறது.
இன பாகுபாடின்றி போட்டித்தன்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் சூழலைத்தான் மலாய்க்காரர் அல்லாதாரும் விரும்புகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஒரு சிறகொடிந்த பறவையைப் போல வலுவிழந்துவிட்டது எல்லாருக்கும் தெரியும்.
பிறகு 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சியின் நிலைமை மேலும் மோசமாகி ஆட்சி அமைக்க முடியாமல் தத்தளித்தது.
அம்னோ பழையபடி நாட்டை ஆள வேண்டும் என அக்கட்சியின் சில குட்டித் தலைவர்கள் கடந்த வாரம் சூளுரைத்த போதிலும் அது வெறும் பகல் கனவைத் தவிர அதற்கான சாத்தியம் இனி இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே அதன் நிலைமை மேலும் மோசமாகாமல் இருப்பதற்கு சிந்தனை மாற்றம் அவசியம் என்பதை காலிட் போன்றத் தலைவர்கள் உணர்ந்துள்ளதைப் போல் தெரிகிறது.
ஆக 67 ஆண்டுகளுக்குப் பிறகு பிற இனத்தவருக்கும் மதிப்பளித்து அவர்களையும் அனுசரிக்கும் வகையில் அம்னோ தனது போக்கை மாற்றிக் கொள்ளுமேயானால் இவ்வாண்டின் சுதந்திர தினம் அக்கட்சிக்கு அர்த்தம் பொதிந்த ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சமயத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி பிற இனத்தவரை புறம் தள்ளும் வகையிலான அதன் போக்கில் இனிமேலாவது மாற்றம் இருக்குமா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.