போலீஸ் எங்களுக்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை என்கிறார் அஸ்மின்

திங்கட்கிழமை தாங்கள் கூடுவதற்கு அனுமதி அளிக்க ஒப்புக் கொண்ட கோலாலம்பூர் மாநகரப் போலீசார் நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.

அதனால் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடுகளையும் கட்சி பின்பற்றாது என அவர் சொன்னார்.

“ஜனவரி 6ம் தேதி கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே-உடன் நிகழ்ந்த சந்திப்புக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட உடன்பாட்டுக்கு ஏற்ப பிகேஆர் நடந்து கொள்ளும்,” என அவர் வலியுறுத்தினார்.

“பின்னர் போலீஸ் அறிவித்த கட்டுப்பாடுகள் அந்த உடன்பாட்டில் இல்லை,” என அஸ்மின் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

‘நாங்கள் அரசமைப்பை பின்பற்றுவோம்’

அரச மலேசிய போலீஸ் படை நேற்று தனது முகநூல் பக்கத்தில் கூட்டத்துக்கான  10 கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதில் தோரணங்கள், சுவரொட்டிகள், ஒலிபெருக்கிகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றுக்கான தடையும் அடங்கும்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் அமைந்துள்ல செந்தூல் மாவட்ட போலீஸ் அந்த நிபந்தனைகளை விதித்துள்ளது.

100,000 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வர் என ஏற்கனவே அஸ்மின் கூறியுள்ளார். அவர்கள் கட்டுப்பாட்டுகள் எப்படி இருந்தாலும்  தங்களது அரசமைப்பு உரிமைகளுக்கு இணங்க ஒன்று கூடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நீதி, நீதித் துறை நேர்மை ஆகியவற்றை நாடும் பொருட்டு அன்வார் இப்ராஹிமுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் பொருட்டு கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள ஒன்று கூடும் சுதந்திரத்துக்கு ஏற்ப அங்கு ஒன்று கூடுமாறு நான் மக்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

அன்வார் ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற வளாக கார் நிறுத்துமிடத்தில் கூடவும் மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா ஆதரவாளர்கள் கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் கூடவும் போலீஸ் அனுமதி கொடுத்துள்ளது.