கட்டாய ஹலால் சான்றிதழ் ஒரு சுமை என்ற டிஏபியின் தெரசாவுக்கு ஜைட் ஆதரவு

உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார்.

“தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர் எம்பியாக தனது வேலையைச் செய்கிறார்”,  என்று கூறினார்.

“கோக் பேசியது ஒரு தீவிரமான விஷயம் அல்ல அதை  ஒரு பிரச்சனையாக்கக்கூடாது” என்று ஜைட் (மேலே) கூறினார்.

நயிம் மீது  ஏன் விசாரணை இல்லை?

குற்றவியல் சட்டத்தின் 298 மற்றும் 505(b) பிரிவுகளின் கீழ் 3R (இனம், மதம், ராயல்டி) விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் ரஸாருதீன் ஹுசைனை மேற்கோள் காட்டினார்.

“கோக் 3R சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை எழுப்பினார், ஆனால் (இஸ்லாமிய விவகார அமைச்சர்) முகமது நயிம் மொக்தார் முதலில் இந்த விஷயத்தை எழுப்பினார். எனவே வே நயிம் விசாரிக்கப்படுவாரா?” என்ற வினவையும் எழுப்பினார் ஜயிட்.

“பிரதமர் அன்வார் இப்ராஹிம், கோக் இந்த விஷயத்தை அமைச்சரவையில்  எழுப்பாமல், அதற்குப் பதிலாகப் பகிரங்கமாகச் செல்வதன் மூலம் சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறினார். அதே விதி நயிமுக்கும் பொருந்துமா?” ஜயிட் வினவுகிரார்.

டிஏபி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக ஐந்து போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் நேற்று தெரிவித்தார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுவை வழங்காத உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கும் திட்டத்தை இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கும் திட்டம் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு பொருத்தமற்றது என்றும் அம்னோ உலமா கவுன்சில் கூறியுள்ளது.