‘901 அன்வார் விடுதலைப்” பேரணியுடன் தொடர்புடையது என நம்பப்படும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கோலாலம்பூரில் பல தனி நபர்களைப் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
“பலர் கைது செய்யப்பட்டுள்ளதை நான் உறுதி செய்கிறேன்,” என பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி வான் அப்துல் பேரி வான் காலித் சொன்னார்.
ஆனால் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கையையும் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
“நான் இன்னும் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்,” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
‘TTR901’.என சாயம் பூசியதற்காக அந்த தனிநபர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நாளான ஜனவரி 9ம் தேதி அன்வாருக்கு ஆதரவாக நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியுடன் அவை தொடர்புடையதா என்பது தெரியவில்லை.
கறுப்பு நிற சாயத்தையும் ஸ்டன்சிலையும் பயன்படுத்தி வரையப்பட்ட அவை பங்சார் வட்டாரத்தில் இந்த வாரம் காணப்பட்டன.
திங்கட்கிழமையன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடத் திட்டமிட்டுள்ளதாக அன்வார் ஆதரவாளர்கள் அறிவித்த பின்னர் அவை தென்படத் தொடங்கின.
அந்தப் பேரணியை அதிகாரிகள் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பது மீது பல ஊகங்கள் நிலவி வந்தன.
ஆனால் நீதிமன்ற வளாக கார் நிறுத்துமிடத்தில் அன்வார் ஆதரவாளர்கள் கூடுவதற்கு அனுமதி அளிப்பதாக போலீஸ் நேற்று அறிவித்தது.
ஆனால் அந்த அனுமதிக்கு 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பதாதைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதும் அவற்றுள் அடங்கும். ஒரிரண்டு ஒலிபெருக்கிகளை மட்டுமே வைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே போட்டி பேரணியை நடத்தப் போவதாக அறிவித்துள்ள பெர்க்காசா, கூட்டரசுசுப் பிரதேச பள்ளிவாசல் வளாகத்துக்குள் கூட அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர்.