ஒசாமா முதல் ஒபாமா வரை…

அபூர்கான்: கோமாளி, பாகிஸ்தானில் கொல்லப்பட்டது ஒசாமா என்று உறுதிப்படுத்தப்படுமா?

கோமாளி: ஒசாமா என்ற ஒருவன் கடந்த மே 1-ல் அமெரிக்க கடற்படையால் கொல் லப்பட்டது உண்மையே. ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட மதவாதப்போர் ஒழிய நீண்ட காலமாகும். அவனது மதவாதப்போர் உருவாக காரணமே அமெரிக்காதான். உலகை தன் கைக்குள் வைத்துக்கொள்ள ரசியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை தயார்படுத்த ஒசாமாவுக்கு பயிற்சி கொடுத்து ஆயுதத்தை அளித்தது அமெரிக்கா. எதை விதைக்கிறமோ, அதைத்தானே அறுவடை செய்ய இயலும். உலக அரசியல் களத்தில் இன்று ஆதிக்கம் செய்வது அமெரிக்கா. அதை எதிர்க்கும் வல்லமை யாரிடமும் கிடையாது. துணிவாக எதிர்த்த ஒரே வீரன் ஒசாமா. ஆனால் அவனது போர் அப்பாவி மக்களை பலிகடா ஆக்கியதால், அவன் பயங்கரவாதியானான். அதேவேளை, ஈராக் நாட்டை முற்றுகையிட்ட அமெரிக்கா ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததை, தவிர்க்க இயலாத மனித அர்ப்பணிப்புகளாக பேசப்பட்டது. கோமாளித்தனமான உலகம்.


பொன்னம்மாள்:
எம்மவன் இண்டர்லோக் புத்தகத்தை படிக்கச்சொன்னா அடிக்க வரான், கொஞ்சம் புத்தி சொல்லுங்க, கோமாளி.

கோமாளி: மவனே, தாயை அடிப்பது தவறு. அப்படி செய்தால் நான் கோமாளி என்றுகூட பார்க்க மாட்டேன், தோலை உரித்து விடுவேன். அம்மாவிடம் நீ படிக்க மறுப்பதற்கான காரணத் தைச் சொல்ல வேண்டும். பதினாறு வயதுள்ள உனக்கு ஏதோ ஓர் உணர்வு தட்டியிருக்க வேண்டும். அகிம்சா வழியான புறக்கணிப்பு என்பது ஒரு மாபெரும் அரசியல் ஆயுதம். இதை திறமையாக பயன்படுத்திய வர்கள் காந்தி, மண்டேலா, மார்டின் லுதர், ஸ்டிவ் பிக்கோ, மல்கோம் மேக்ஸ், நாளை நீயாககூட இருக்கலாம்.

இன-மான உணர்வு, தேசியத்தன்மை, விடுதலை மொழிப்பற்று போன்றவை மனித பண்புகளுக்கு வித்திடு பவை. ஆதிக்க சூழலில் ஓர் இனம் மற்ற இனம் மீது திணிக்கும் கருத்தான்மை எதிர்க்கும் வல்லமை மாறுபட்ட வழிமுறைகளை கொண்டது. இண்டர்லோக் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை திணிக்கிறது. அது இந்தியர்களையும் சீனர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக முத்திரை குத்துகிறது. இது ஒரு புதிய வரலாற்றை உண்டாக்கும் மோசமான அரசாங்கத் திட்டம். அதை அமுலாக்கம் செய்ய அனுமதிப்பது நாம் செய்யும் மாபெரும் தவறாக அமையும்.

எனவே மவனே, நீ படிக்க மறுப்பது உன்னை ஒரு காந்தியாக்குகிறது. நீ புதிய வரலாறு படைக்கும் ஓர் உண்மை மலேசியன். கோமாளியான நான் உன்னை நேசிக்கிறேன். ஒருநாள் பலர் உன்னை யாசிப்பார்கள்.

அரசியல் கோமாளியின் பதில்கள் தொடரும்…