ஹலால் சான்றிதழின் மீதான முடிவு ஆட்சியாளர் மாநாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது  – துணைப் பிரதமர்

முன்மொழியப்பட்ட கட்டாய ஹலால் சான்றிதழ் தொடர்பான எந்தவொரு முடிவும் ஆட்சியாளர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

எனவே, இந்தப் பிரச்சினையில் எந்தத் தரப்பினரும் கொந்தளிக்க வேண்டிய அவசியமில்லை, குறிப்பாக அது இன்னும் முன்மொழிவு கட்டத்தில் இருக்கும்போது.

“இது (கட்டாய ஹலால் சான்றிதழ்) இன்னும் முன்மொழிவு கட்டத்தில் உள்ளது மற்றும் இன்னும் அரசாங்க கொள்கையாக மாறவில்லை. இந்த விஷயத்தில் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்”.

இஸ்லாமிய விவகாரங்களுடன் தொடர்புடைய விஷயங்கள், ஹலால் விஷயம் உட்பட, ஆட்சியாளர் மாநாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. எனவே இந்தப் பரிந்துரை கட்டாயமாக்கப்படுமா இல்லையா என்பது ஆட்சியாளர் மாநாட்டைப் பொறுத்தது என்று, மலேசிய ஹலால் கவுன்சில் (Malaysia Halal Council) தலைவராகவும் இருக்கும் ஜாகித், சீனாவுக்கு இன்று நடத்திய பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் என்று பெரிதா ஹரியன் குறிப்பிட்டது.

பன்றி இறைச்சி அல்லது மதுவை வழங்காத அனைத்து உணவு நிறுவனங்களும் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கான பிரதம மந்திரி (மத விவகாரங்கள்) அமைச்சர் முகமட் நயிம் மொக்தாரின் முன்மொழிவை டிஏபியின் செபுதே எம்பி தெரசா கோக் ஆட்சேபித்ததிலிருந்து பிரச்சினை தொடங்கியது.

இந்த நடவடிக்கை வணிகங்களுக்குச் சுமையாக இருக்கும் என்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கு ஆளாக்கும் என்றும் கோக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, டிஏபி துணைத் தலைவர்மீது 50 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன, இது குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் கீழ் விசாரணையைத் தூண்டியது.

15 நாட்களில் சான்றிதழ் ஒப்புதல் ​

MHM மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி திணைக்களம் (Jakim) ஏற்கனவே ஹலால் சான்றிதழ் விண்ணப்பங்களின் ஒப்புதலுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாகிட் மேலும் கூறினார்.

“இந்தச் செயல்முறை ஒன்பது மாதங்கள் எடுத்துப் பின்னர் 23 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டது”.

“இப்போது அது மேலும் 15 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது, விண்ணப்பித்த தேதியிலிருந்து, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால்.”

ஜாஹிட்டின் கூற்றுப்படி, ஜக்கிம் ஏற்கனவே ஹலால் சான்றிதழ் விண்ணப்பதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒப்புதல் காலக்கெடுவைக் குறைக்கும் நடவடிக்கைக்கு முன்பே ஈடுபடுத்தியிருந்தது.

ஜாக்கிம் இந்தச் செயல்முறையை எளிதாக்குவதற்கு என்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே, அதன் மீது (விண்ணப்பங்கள் அங்கீகாரம்) தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது.