ஜயிஸிடம் பேசும் பைபிள் உள்ளது என்கிறார் ஹசான் அலி

முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் “பேசும் பைபிள்” ஆதாரத்தை ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையிடம் இருப்பதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி கூறியிருக்கிறார்.

அந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா என்னும் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மேல் விவரம் தர மறுத்து விட்டார்.

“அந்த ஆதாரம் ஜயிஸ் வசம் உள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ”

“அதே போன்று டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் நாங்கள் எந்த நடவடிக்கையையும் முடிவு செய்யவில்லை,” என அவர் சிரம்பானில் இன்று ஹிம்புன் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“என்றாலும் மதம் மாற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டதுதான் இங்கு முக்கியமான ஆதாரம்.

“நான் சம்பந்தப்பட்ட நபர்களுடைய சாட்சியத்தை சமர்பிக்க வேண்டும். ஆனால் நான் அதில் வெற்றி பெறுவேனா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் பகிரங்கமாக முன் வந்து உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்”, என்றார் ஹசான்.