பினேங்கிற்கு ராம் கர்ப்பால் முதலமைச்சராக முடியுமா?

இராகவன் கருப்பையா- தற்போது ஒன்றன் பின் ஒன்றாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜ.செ.க.வின் மாநிலத் தேர்தல்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது அதன் பினேங் மாநிலத் தேர்தல்தான்.

இதற்கு முக்கிய காரணம் அந்த மாநிலத்தில் மட்டும்தான் அக்கட்சி ஆட்சி புரிகிறது என்பது ஒருபுறமிருக்க, யார் அடுத்த முதலமைச்சர் எனும் சலசலப்பு தற்போது மேலோங்கியுள்ளது.

முன்பு கெராக்கான் கட்சி ஆட்சி செய்த காலம் மட்டுமின்றி, 2008ஆம் ஆண்டிலிருந்து ஜ.செ.க. ஆட்சி புரியத் தொடங்கிய பிறகும் கூட காலங்காலமாக அம்மாநிலத்தில் சீனர்கள்தான் முதலமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.

எனினும் நேற்று நடைபெற்ற அதன் மாநிலத் தேர்தலில் முன்னாள் சட்டத்துறை துணையமைச்சர் ராம் கர்ப்பால் சிங் யாரும் எதிர்பாராத வகையில் முதல் நிலையில் வெற்றி பெற்றதால் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

நடப்பு முதலமைச்சர் செள கோன் யோ மீண்டும் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்ததைத் தொடர்ந்து பலவிதமான யூகங்கள் தற்போது தலைதூக்கியுள்ளன.

இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் முதலமைச்சர் எனும் சர்ச்சை அப்போதே எழுந்தது.

இதற்கு மூலக்காரணம் ஜ.செ.க.வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் குடும்பத்தின் ஆதிக்கம்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

பினேங் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய நிலையிலும் கூட அந்த குடும்பத்தின் ஆதிக்கம்தான் பல்லாண்டுகளாக கட்சியில் நிலவுகிறது. தங்களுக்கு வேண்டியவர்களைத்தான் கட்சியிலோ அரசாங்கத்திலோ உயர் பதவிகளில் அமரச் செய்வார்கள்.

இப்போது கூட அதுதான் நடந்துள்ளது. மாநிலத் தேர்தலில் முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ள ராம் கர்ப்பால் சிங்கை புறம் தள்ளிவிட்டு 2ஆதாக வந்த புக்கிட் மெர்தாஜாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிம்மை மாநில ஜ.செ.க. தலைவராக நியமித்துள்ளார்கள்.

மனிதவள அமைச்சராக  இருக்கும் ஸ்தீவன் சிம்மை அடுத்தத் தேர்தலுக்குப் பிறகு பினேங்கின் முதல்வராக அமர்த்துவதற்குதான் இந்த ஏற்பாடு என்பதும் வெள்ளிடை மலை.

சீனர்கள் மட்டும்தான் அம்மாநிலத்திற்கு முதல்வர்களாக இருக்க முடியுமா? மற்றவர்களுக்குத் தகுதி இல்லையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.ஆக ஜ.செ.க.விலும் அப்பட்டான வகையில் இன பாகுபாடு தலைவிரித்தாடுகிறது என்பதைத்தானே இது புலப்படுத்துகிறது!அந்தப் பதவிக்கு லிம் கிட் சியாங்கின் இளைய மகள் லிம் ஹுய் யிங்கும் தயார் செய்யப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் தஞ்சோங் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லிம் ஹுய் யிங் எடுத்த எடுப்பிலேயே கல்வித் துறை துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது நிதித்துறை துணையமைச்சராக நியமனம் பெற்றார்.

இத்தகைய பதவி சுகங்களைப் பெறுவதற்கு அவருக்கு இருக்கும் ஒரே தகுதி அவர் லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று சொல்லப்படுகிறது.

இப்போது கூட மாநிலத் தேர்தலில் அவருக்கு 12ஆவது இடம்தான் கிடைத்தது. ஆனால் சக்திமிக்க மாநில செயலாளர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முறைப்படி நடுநிலையில் இருக்க வேண்டிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எந்தனி லோக் கூட, ஸ்தீவன் சிம்மையும் ஹுய் யிங்கையும் தாம் ஆதரவிப்பதாக தேர்தலுக்கு முன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

ஆக நம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அக்கட்சியில் எவ்வளவுதான் உழைத்து முன்னேறினாலும் உயர்பதவி நியமனம் எனும் வரும் போது சீனர் அல்லாதவர்  ஓரங்கட்டப்படுவர் என்பதை பொய்யாக்கா இது ஒரு முக்கிய தருணம்.