திங்கள்கிழமை கூட்டம் கூடுவதற்கு அனுமதி வழங்கியபோது நகர போலீஸ் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று கூறினார்.
கூட்டம் நடத்துவது மீதான ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் அதிகாரிகள் விதித்துள்ள நிபந்தனைகளை கட்சி கடைபிக்காது என்றாரவர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலேயுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பிகேஆர் கடைபிடிக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அந்த ஒப்பந்தம் அவரை ஜனவரி 6 ஆம் தேதி சந்தித்த பின்னர் அறிவிக்கப்பட்டது.
“அந்த ஒப்பந்தம் போலீஸ் படையினர் பின்னர் அறிவித்த நிபந்தனைகள் பற்றி எதுவும் கூறவில்லை”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றுவோம்”
அரச மலேசிய போலீஸ் நேற்று பின்னேரத்தில் 10 நிபந்தனைகளை அதன் பேஸ்புக் தளத்தில் வெளியிட்டது. அக்கூட்டத்தில் பதாதைகள், சுவரொட்டிகள், ஒலிபெருக்கிகள் மற்றும் சொற்பொழிவுகள் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் நீதிமன்றம் அமைந்திருக்கும் செந்துல் மாவட்ட போலீஸ் அந்த நிபந்தனைகளை விடுத்தது.
அக்கூட்டத்தில் 100,000 கூடுவர் என்று முன்னதாக கூறியிருந்த அஸ்மின், போலீஸ் நிபந்தனைகள் எதுவாக இருந்தபோதிலும் கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அவர்களின் அரசமைப்பு உரிமைகளின் அடிப்படையில் பங்கேற்பர் என்றார்.
“அன்வார் இப்ராகிம்மிற்கு நீதியும் நீதிபரிலானத்தில் நேர்மையும் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் தங்களுடைய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த மலேசிய அரசமைப்புச் சட்டம் ஒன்றுகூடுதலுக்கு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் ஒன்றுகூடி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை மக்களுக்கு மீண்டும் விடுக்கிறேன்”, என்று அஸ்மின் மேலும் கூறினார்.
அன்வார் ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற கார்கள் இடத்தில் கூடவும், பெர்காசா ஆதரவாளர்கள் மஸ்ஜித் வில்லாயா வளாகத்தில் கூடவும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
திங்கள்கிழமை காலை மணி 7.00 லிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாத்தியம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்க்கண்ட சாலைகளைத் தவிர்க்குமாறு போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர்:
ஜாலான் டூத்தா (இருபுறமும்), ஜாலான் கூச்சிங், ஜாலான் சிகாம்புட், ஜாலான் கிட்மாட் உசாஹா, ஜாலான் இபாடா, ஜாலான் டூத்தாமாஸ், ஜாலான் பெர்சியாரான் டூத்தாமாஸ் மற்றும் ஜாலான் ஹிக்மாட் உசாஹா.
இதனிடையில், திங்கள்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “Free Anwar 901” பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டு அது சட்டப்பூர்வமானது என்றால், அரசாங்க பல்கலைக்கழக மாணவர்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் முகம்மட் காலெட் நோர்டின் கூறினார் என்று தெரியப்படுகிறது.