இராகவன் கருப்பையா – நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நம் சமூகத்தைச் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டணியில் இருக்கின்றனர். ஒருவர் கூட எதிர்தரப்பில் இல்லை.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட போது இந்நிலையைக் கண்டு நாம் அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் எல்லாருமே ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சனைகளில் பல சுலபத்தில் தீர்வு காணப்படும் என்றெண்ணி நாம் அகமகிழ்ந்தோம்.
ஆனால் கடந்த சுமார் 23 மாதங்களாக கிட்டதட்ட அவர்கள் எல்லாருமே பூனைகளாகப் பதுங்கிக் கிடப்பது நமக்கு வியப்பாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது.
தேர்தலின் போது துடிப்புமிக்க இளைஞர்களாகக் களமிறங்கிய அவர்கள் தற்பொழுது பற்களை இழந்த புலிகளாகக் கூனிக்குறுகி காட்சியளிப்பது நாம் எதிர்பாராத ஒன்று.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து 3 வரவு செலவுத் திட்டங்களை நாம் பார்த்து விட்டோம். ஆனால் அவை எல்லாமே நமக்கு ஏமாற்றத்தைதான் கொண்டுவந்தன. அனைத்துத் தரப்பினருக்கும் இது மிகத் தெளிவாகத் தெரியும்.
இந்த 23 மாதங்களில் நம் சமூகம் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகர்ந்துள்ளதற்கான அறிகுறிகளைக் காணவில்லை என்பதுதான் உண்மை.
“நான் தேசிய நிலையில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கவில்லை. ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே பிரதிநிதிக்கிறேன்” என்று அவர்கள் காரணம் கூறலாம்.
ஆனால் ஒரு மக்களவை உறுப்பினர் எனும் வகையில், தொய்வடைந்து கிடக்கும் நம் சமுதாயத்தின் நலன்களுக்காக குரல் எழுப்புவதில் தவறில்லை. அது தவறு என்று யாருமே சொல்லமாட்டார்கள். இதனைத்தான் நம் சமூகம் எதிர்பார்க்கிறது. அவைக்கு வெளியே நிற்கும் ஒரு குப்பனோ சுப்பனோ இதனை செய்ய முடியாது.
ஜ.செ.க. தலைவர் லிம் குவான் நமக்காக குரல் கொடுத்தார். அதே போல சிலாங்கூர், பாங்ஙி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வின் ஷாரெட்ஸான் இந்திய மாணவர்களுக்காக குரல் எழுப்பினார்.
ஆனால் நம் சமூகத்தைச் சார்ந்த யாரும் அதுபோன்றதொரு முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.
தலைநகர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மட்டுமே பேசினர். அதுவும் கூட தனது தலைமையின் கீழ் உள்ள ‘மித்ரா’வுக்கு நிதி போதாது என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த நிதியின் ஆளுமை பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் வாய் திறக்க வில்லை.
அதாவது அரசு இயந்திரத்தின் கீழ் வறுமை ஒழிப்பு இயங்க வேண்டும், அதன் வழி இந்தியர்கள் பயனடைய இந்தியர்களுக்கான அரசாங்கத்தின் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்றப் பெருந்திட்டம் செயலாக்கப்பட வேண்டும்.
பாரிசான் ஆட்சியின் போது எதிரணியில் இருந்து கொண்டு சிங்கம் போல் கர்ஜித்த தற்போதைய அமைச்சர் கோபிந் சிங் அமைச்சரவையில் இருப்பதால் அதிகம் பேசமுடியாது என்பது சமூகதிற்கு பாதகமாக உள்ளது.
எனினும் அவருடைய இளைய சகோதரர் ராம் கர்ப்பால் சிங், கணபதிராவ், நேத்தாஜி ராயர், சிவகுமார், சரவணன் மற்றும் யுனேஸ்வரன் போன்ற இதர உறுப்பினர்கள் எல்லாருமே மவுன சாமியார்களாக இருப்பதுதான் நமக்கு மேலும் வியப்பளிக்கிறது.
அன்வாரின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கேள்வி எழுப்பினால் அநேகமாக அடுத்தத் தேர்தலில் போட்டியிட தொகுதியோ அரசாங்கப் பதவியோ கிடைக்காது எனும் பயம் அவர்களை வாட்டி வதைக்கிறது போலும்.
தொகுதி கிடைக்காமல் போகக்கூடும் எனும் அச்சத்தில் சமூகக் கடப்பாட்டில் இருந்து அவர்கள் ஒதுங்கி நின்றால், தொகுதி கிடைக்க வாய்புள்ளது அதோடு அவர்களுக்கு சம்பளமும் வாழ்நாள் ஓய்வூதியமும் கிடைக்கும். இதுதானா அரசியல் ?