டிஏபி: பிரதமர் பதவிக்கு நாங்கள் குறி வைக்கவில்லை அன்வாரே எங்கள் தேர்வு

புத்ராஜெயாவை பிடிக்க டிஏபி எண்ணம் கொண்டிருந்தாலும்  அது பிரதமர் பதவிக்கு குறி வைக்கவில்லை என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.

அவர் இன்று தேசிய டிஏபி மாநாட்டில் கொள்கை உரையாற்றினார். அந்தப் பதவிக்கு டிஏபி ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே கொண்டுள்ளது. அதுதான் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் என அவர் சொன்னார்.

“பிரதமர் பொறுப்பை ஏற்க எந்த டிஏபி தலைவரும் ஆசைப்படவில்லை. தங்களை அந்தப் பதவிக்கு முன்மொழியவும் இல்லை. பிரதமராகக் கூடிய ஒரே ஒரு மனிதர், அன்வார் இப்ராஹிமே.”

தமது உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்வார் மீதான வழக்கில் நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

அதனால் அடுத்த பொதுத் தேர்தலில் களம் இறங்குவதற்கு முன்னர் பிரதமர் பதவிக்கு வேறு வேட்பாளர் யாரையும் தேர்வு பக்கத்தான் ராக்யாட் தயார் செய்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

அன்வார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டாலும் அனுப்பப்படா விட்டாலும் நாட்டின் பிரதமர் பதவி அன்வாருக்கே  என்று லிம் வலியுறுத்தினார்.

” பக்காத்தான், எதிர்த்தரப்புத் தலைவர் என்னும் முறையில் அன்வாருடன் நமது கட்சியின் உறுதியான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். நாளை அவரது வழக்கு முடிவு எப்படி இருந்தாலும் மாற்றுப் பிரதமர் என்னும் முறையில் நாங்கள் அவருக்கு பின்புலமாக இருப்போம். நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளிப்போம்.”

“நமது கவனம் அன்வாரை பற்றியது அல்ல. அடுத்த பொதுத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது  என்பதாக இருக்க வேண்டும். நாளைய பொழுது அவருக்கு நல்லதாக இருக்க எங்களுடைய வாழ்த்துக்கள். அவரும் நம்முடன் மலேசியக் கனவைக் காண வேண்டும்.”