குதப்புணர்சி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக அன்வார் இப்ராகிமின் “இறுதி செய்தியை” கேட்பதற்காக கோலாலம்பூர், கம்போங் பாருவில் ஆயிரக்கணக்கானோர் இன்றிரவு குழுமினர்.
அன்வாருடன் எதிரணியின் முக்கிய தலைவர்களான பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் நுருல் இஸ்ஸா அன்வார் மற்றும் தியன் சுவா, பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் மற்றும் தேசிய கவிஞர் எ. அப்துல் சமாட் சைட் ஆகியோரும் இருந்தனர்.
தலைவரின் உரையைக் கேட்க சுமார் 5,000 பேர் சுல்தான் சுலைமான் கிளப்பில் கூடியிருந்தனர்.
உள்ளே இடம் கிடைக்காத பலர் அருகிலுள்ள கட்டடங்களின் படிக்கட்டுகளில் நின்றனர்.
பல ஆதரவாளர்கள் வெளியிடத்திலிருந்து வந்தவர்கள். ஜாலான் டூத்தா நீதிமன்ற கார்பாக்கில் காலை மணி 7.00 நடைபெறவிருக்கும் 901 பேரணியில் பங்கேற்பதற்காக கோலாலம்பூருக்கு முன்னதாகவே அவர்கள் வந்துள்ளனர்.
அன்வாருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்த அக்கூட்டத்தினர் அன்வாரின் உரையை அமைதியாக கேட்டனர்.
“இன்றிரவு நாம் வெற்று பெற்றுள்ளோம். நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். பிரச்னை என்ன?”, என்று ஆரவாரத்தோடு ஆதரவு தெரிவித்த கூட்டத்தினரிடம் அவர் கூறினார்.
அவர் சிறையிலடைக்கப்பட்டால், அவரை அடித்து மீண்டும் துன்புறுத்துவார்கள் என்று அவரது குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
“அது மீண்டும் நடக்காது”, என்று அன்வார் கூறினார்.