நோயற்ற வாழ்வை மையமாக கொண்ட அரசாங்க கொள்கை வேண்டும்

கி.சீலதாஸ் – பொதுவாக நோய் எல்லா உயிர்களையும் தாக்கும். மிருகங்களும் நோய்களால் பாதிப்படைகின்றன. இயற்கை வளங்களான செடிகளும் மரங்களும் அவற்றின் விளைச்சல்களும் நோயால் தாக்கப்படுவது இயல்பு. ஆனால், மனிதன் மட்டும் உடல் நோய் மட்டுமில்லாமல் பலவிதமான நோய்களால் பாதிப்படைகிறான்.

குறிப்பாக, கல்வியில்லாதவனைக் கல்விக் குருடன் என்கிறோம். கோபம், பொறாமை, வெறுப்பு, அகங்காரம், தற்பெருமை, செருக்கு போன்ற குணாதசியங்களும் மனிதனின் நோய் வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

நாட்டின் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் வளப்பம் மிகுந்த நாடாக இருந்தாலும் மக்கள் வறுமையில் அல்லது தங்களின் தேவைகளுக்காகப் போராடுகிறார்கள் எனின் அதைப் பொருளாதார அதர்ம நோய் என்று சொல்லுவோம்.

எனவே, நோய் என்பதைப் பல கோணங்களிலிருந்து பார்த்தால் அதன் கொடுமை பலவிதமான விசுவரூபங்களை மேற்கொள்வதைக் காணலாம்.

இந்தக் காலகட்டத்தில் நம்மைத் துன்புறுத்துவது என்ன? எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்வதுதான் முக்கியம், நம் எதிர்பார்ப்பு. ஆனால், இது நடைபெறாத காரியம். நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டாலும் பலவிதமான புற நோய்களை நம்மைத் தாக்குவது ஒன்றும் ஆச்சரியமல்லவே.

மலேரியா, அம்மை, டெங்கி, காசநோய், புற்றுநோய் போன்ற கொடுமையான நோய்கள் நமக்கு அறிமுகமானவை. அவற்றைவிட கொடுமையானது தான் கோவிட்-19. உலகத்தையே அது தாக்கியது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் பல நாடுகள் போல் அந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் அரசு மிகுந்த சிரத்தைக் காட்டியது.

மலேசியாவின் அரசு மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால் அது மிகவும் மெச்சத்தக்க உயர்நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்தப் பொது மருத்துவச் சேவைக்குப் போட்டியாக அமைந்தது தனியார் மருத்துவத்துறை. இதன் வளர்ச்சியும் அபாரமானது என்றால் மிகையாகாது.

பொருளாதாரச் செழிப்புடையவர்கள் தனியார் மருத்துவத்துறையை நாடுவது கவுரப் பிரச்சினையாக மாறிவிட்டதையும் காணலாம். அரசின் பொது மருத்துவத்துறை சாதாரண மனிதனின் உடல் நலனில் கரிசனம் கொண்டிருந்தது. தனியார் மருத்துவத்துறை ஆதாயத்தில் குறியாக இருந்தது என்ற கருத்தும் பலமாகவே இருந்தது.

இந்தக் கருத்து பலமடைவதற்குக் காரணமாக இருந்தது தனியார் மருத்துவகங்களில் வழங்கப்பட்ட முன்னேற்றமான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் நவீனச் சிகிச்சைக்கான நூதன மருத்துவ விஞ்ஞானக் கருவிகள்.

அரசு மருத்துவத்துறை தனியார் மருத்துவத்துறையோடு போட்டிப் போட முடியவில்லை என்று சொல்லப்பட்டது. இப்படி சொல்லுவது வெட்கக் கேடானது என்றும் சொல்லப்பட்டது. அதில் நியாயம் இருக்கிறது. அரசு நினைத்தால் செய்ய முடியாதது ஏதாவது உண்டா? மருத்துவத்துறையை நவீனப்படுத்த பணம் இல்லை என்று சொல்லுவதும் சோடையான கருத்து என்றாலும் தகும்.

பல துறைகளுக்குப் பணத்தை வாரி வாரி கொடுக்கும் அரசு, மக்களின் நோயற்ற வாழ்வே நாட்டுக்குப் பலனளிக்கும் என்பதை உணர மறுத்தது விசித்திரம் அல்லவா? இறை நம்பிக்கை முக்கியமானது தான்.

அதற்காக இறைவனின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அவனைப் போற்றுவதிலேயே பணத்தைச் செலவழிப்பது எந்த வகையில் நியாயம்? மனிதனை மதிக்காத அரசை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை உணராதவர்களின் ஆதிக்கம்தான் ஓங்கியிருக்கிறது.

மேலே சொன்னவை ஒரு பக்கமிருக்க, நாட்டின் ஊழல் நடவடிக்கைகளால் பல கோடிகள் மாயாமாக மறைந்துவிடவில்லையா? அது ஒரு சிலரின் கைக்குள் இருந்தது. இதுவும் ஒரு கொடுமையான வளர்ச்சி என்பதை உணர்ந்தும் அதைத் தடுப்பதில் காட்டும் உற்சாகம் திருப்தி அளிக்கவில்லையே. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அரசு மருத்துவத்துறை  ஒரு வகையில் சமாளித்தது. மெச்சத்தக்க செயல்தான்.

பொது, தனியார் மருத்துவத்துறைகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இந்தப் போட்டியில் லாபத்தைக் காணும் நோக்கத்தோடு காப்புறுதி நிறுவனங்களில் கவனம் கூர்மையாயிற்று.  சாதாரண குடிமகன் உடல் நல காப்புறுதி பெற முடிந்தது. தனியார் மருத்துவத்துறை நவீனக் கருவிகள் மட்டுமல்ல நட்சத்திர தங்குவிடுதிகளில் வழங்கப்படும் வசதிகளைத் தந்தன. இவையாவும் மக்களைக் கவர்ந்தன.

காலப்போக்கில் தனியார் மருத்துவத்துறைகளிலும் நோயைக் குணப்படுத்துவதில் கவனம் மிகுந்திருந்த போதிலும் அதை வழங்குவதற்கான விலையும் அதிகரித்தது. கடந்த பல ஆண்டுகளாகத் தனியார் மருத்துவத்துறையின் உடல் நல காப்புறுதியின் காப்பீட்டுக் கட்டணம் உயர்ந்து கொண்டே இருந்தது.

இப்பொழுது உடல் நல காப்புறுதிக்கான காப்பீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் காப்புறுதி நிறுவனங்கள் கோருகின்றன. இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி நாற்பது முதல் எழுபது விழுக்காடு உயர்வைக் கோருகின்றன காப்புறுதி நிறுவனங்கள்.

காப்பீடு கட்டணத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய பொருளகத்திற்கு (பெங்க் நெகரா) உண்டு. இது குறித்து நிதி அமைச்சும் பெங்க் நெகரா நிபுணர்களும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறதாம். ஆனால், அதில் பொது மக்கள் பார்வையாளர்களாகக் கூட கலந்து கொள்ள முடியாது.

இன்றைய அரசு மருத்துவத்துறை வசதிகள் பொது மக்களுக்குத் திருப்தி அளிக்கும் தரத்தைக் கொண்டிருக்கிறதா என்றால் தனியார்களின் வளர்ச்சியே விடையை அளிக்கிறது.

மக்களின் நலனில் கவனம் தேவை என்பதை நாம் வலியுறுத்த தேவையில்லை. காரணம், நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது வாய்மொழி. இதை நம் மூதோதையர் உணர்ந்ததன் விளைவுதான் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்.

மக்கள் மருத்துவத்தையே நம்பி தவிப்பதை விட கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் மருத்துவத்தின் தேவை குறையலாம். அதோடு அரசும் மருத்துவத்துறையை நவீனப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாடு முழுவதும் அந்த நவீன வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளை அமைக்க வழி காணலாம்.

ஆன்மிகம் தேவைதான். ஆனால், மனிதனின் உடல்நல தேவைகளைப் புறக்கணிப்பது நியாயமான அணுகுமுறையா? சிந்திக்க வேண்டும். ஆரோக்கியமே செல்வம் என்கிறது ஆங்கில பழமொழி ஒன்று. இன்றைய நிலையைப் பார்த்தால் செல்வம் இருந்தால்தான் உடல்நலம்  கிட்டும் என்ற நிலை உருவாகிவிட்டது என்றால் அதுவும் ஏமாற்றத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது. இதில் மாற்றம் காண முற்படுமா அரசு?