டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வெடிப்பு சம்பவம்

கோலாலம்பூரில் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் இன்று காலை மணி 10.00 அளவில் ஒர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த அறிவிப்பு போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து பொது மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றும் அது அறிவுரை கூறியது.

ஆனால் மேல் விவரங்களை போலீஸ் முகநூல் பக்கம் தரவில்லை.

காலை மணி 10.10, 10.25, 10.50 அளவில் அந்தப் பகுதியில் மூன்று வெடிப்புக்கள் செவிமடுக்கப்பட்டதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

அன்வார் விடுவிக்கப்பட்ட பின்னர் தாம் கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலுக்கு செல்லப் போவதாகக் கூறிய போது முதலாவது சம்பவம் நிகழ்ந்தது.

நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியாகும் ஜாலான் கிட்மாட் உசாஹா சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அது நிகழ்ந்தது.

புரோட்டோன் கெம்பாரா ஒன்றுக்கு அருகில் போக்குவரத்து உருளை (CONE) ஒன்றிலிருந்து வந்ததாக நம்பப்படும் அந்த வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு வாயிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.

அந்த வெடிப்பு ஏற்பட்ட போது தமக்கு முன்னால் நால்வர் சென்று கொண்டிருந்ததாகவும் சீன வழக்குரைஞர் ஒருவர் காயமடைந்ததாகவும் அந்த உருளையை நோக்கிச் சாலையில் சென்று கொண்டிருந்த 38 வயதான நாராஸா மூடா கூறினார்.

போலீஸ் அந்த இடத்திலிருந்து பொது மக்களை வெளியேற்றியதுடன் அந்தப் பகுதியையும் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் கார் சேதமடைந்தது

ஒரு சம்பவத்தில் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிஸபத் வோங்-கின் காரும் அவருடைய சிலாங்கூர் அரசாங்கச் சகா ஒருவருடைய காரும் சேதமடைந்தன.

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சிதறிய துண்டுகளினால் வோங் காரின் பின்பகுதி சேதமடைந்தது. அதே வேளையில் அவருடைய சகாவின் கார் கதவு சேதமடைந்தது.

தடயவியல் சோதனைகளுக்காக அந்த இரு வாகனங்களையும் போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக வோங் கூறினார்.

அந்தச் சம்பவங்களினால் விளைந்த சேதங்கள் பற்றியும் காயங்கள் பற்றியும் பல வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது குறித்தும் இருவர் காயமடைந்திருப்பது குறித்தும் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அண்மையில் போலீஸ் உறுதி செய்தது.