சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியை மாநில ஆட்சிக்குழுவிலிருந்து அகற்ற சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா-வின் ஒப்புதல் தேவை என்று கூறப்படுவதை மறுத்துள்ளார்.
புதன்கிழமை வழக்கம்போல் சுல்தானைச் சந்திக்கும்போது ஹசானின் பதவிநீக்கம் பற்றி விவாதிக்கப்போவதாகவும் அவர் சொன்னார். இன்று அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பைச் செவிமடுக்கச் சென்ற காலிட் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
ஹசானைப் பதவியிலிருது அகற்ற சுல்தானின் அனுமதி பெற வேண்டுமா என்று அப்போது அவரிடம் வினவப்பட்டது.அது தேவையில்லை என்று பதிலளித்த அவர், ஹசான் அப்பதவியில் இருப்பதா இல்லையா என்பதை பாஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஹசான், ஒரு “கனவானாக” இருந்தால், கட்சியின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்தபின்னர் தாமே பதவி விலகுவதே பொருத்தமாக இருக்கும் என காலிட் வலியுறுத்தினார்.
ஹசான், மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாமிய விவகாரம், மலாய்ப் பழக்கவழக்கம், பொதுவசதிகள் மீதான குழுவுக்குத் தலைவராக இருக்கிறார்.கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஹசான் சுல்தானின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்கிறார்.
அவரைப் பதவிநீக்கம் செய்வது பக்காத்தான் ரக்யாட் அரசுக்கும் சுல்தானுக்குமிடையில் மீண்டுமொரு சர்ச்சையைத் தோற்றுவிக்கலாம்.
ஹசான், கட்சிநலனுக்கு எதிராக செயல்பட்டு வந்திருப்பதால் அவரைக் கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவ்வாங் நேற்று அதிர்ச்சிதரும் அறிவிப்பு ஒன்றைச் செய்தார்.
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் தாம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அது பாஸின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பதால் தம்மைக் கட்சியிலிருந்து விலக்கி விட்டார்கள் என்றும் ஹசான் கூறினார்.
ஹசான், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து பாஸின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உயர் அமைப்பான ஷுரா மன்றத்துக்கு 14-நாள்களுக்குள் முறையீடு செய்துகொள்ளலாம்.