பிஎன் எம்பி:மக்கள் மனத்தில் நஜிப்பின் மதிப்பு உயரும்

அன்வார் விடுவிக்கப்பட்டது நீதிமன்றங்கள் நேர்மையாக செயல்படுவதைக் காண்பிக்கிறது. இது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவாக வேலை செய்யும் என்கிறார் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லான். குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டபின்னர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அந்த சாபா அம்னோ அரசியல்வாதி, தீர்ப்பு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இல்லாமல் நடுவு நிலையில் இருப்பவர்களைதான் அதிகம் பாதிக்கும் என்றார்.

“தீர்ப்பு, பிஎன் அல்லது பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களை அவ்வளவாக பாதிக்காது. ஆனால், நடுநிலை நிற்பவர்கள் நீதிமன்றங்கள்  பாரபட்சமின்றி செயல்படுவதைப் பெரிதும் பாராட்டுவார்கள்”, என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.

“ஒன்று மட்டும் உறுதி. இதன்பிறகு, நஜிப்பின் அங்கீகார மதிப்பீடு உயரப் போகிறது”, என்றாரவர்.

இனி, மலேசியர்கள் பிஎன், பக்காத்தான் ஆகியவற்றின் கொள்கைகளை மதிப்பிட்டு அதற்கேற்ப முடிவு செய்வார்கள் என்று அவர் நம்புகிறார்.

“இனி, புத்ரா ஜெயாவுக்கான போராட்டம் தகுதியின் அடிப்படையில் நடைபெறும். புக்கு ஜிங்கா-வா, இடிபி/ஜிடிபி/பிடிபி-யா? சிறந்தவர்கள் வெற்றி பெறுவர்”, என்றாரவர்.

குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் அதன் விளைவை பிஎன் அனுபவிக்கும் என்று பக்காத்தான் ரக்யாட் முன்பு எச்சரித்து வந்தது. அன்வார் சிறை சென்றால் பிஎன் ஆதரவு சரியும் பக்காத்தானுக்கு ஆதரவு கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

இப்போது அன்வார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், பக்காத்தான் வாய்ப்புகள் மங்குமா? அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்கிறார்கள் பக்காத்தானின் வியூக வகுப்பாளர்கள்.

அன்வார் விடுவிக்கப்பட்டிருப்பதால், நடுவுநிலை வாக்காளர்கள் பிஎன்னுக்கு எதிராக வாக்களிப்பது குறையும் என்பதை டிஏபி-யின் லியு சின் தோங் ஒப்புக்கொள்கிறார்.

ஆனாலும், தீர்ப்பு, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட பக்காத்தான் ரக்யாட்டுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளதாக அவர் நினைக்கிறார்.

மலாய்க்கார்களில் அப்பக்கமும் இப்பக்கமும் சேராமல் வேலிமேல் உள்ளவர்களாக விளங்கும் வாக்காளர் எண்ணிக்கை  15 விழுக்காடு இருக்கலாம் என்று கூறிய லியு, தீர்ப்பை அடுத்து இவர்கள் பிஎன்னுக்கு வாக்களிக்கக்கூடும் என்றார்.

குதப்புணர்ச்சி வழக்கு முடிந்து விட்டதால் இனி, பக்காத்தான் தன் பரப்புரைகளில் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாஸ் தேர்தல் பிரிவுத் தலைவர், டாக்டர் ஹட்டா ரம்லி, தீர்ப்பு பக்காத்தானுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார். இனி, பக்காத்தானில் தலைமை பற்றிக் குழப்பம் இருக்காது என்றாரவர்.

“அன்வார் எங்களுக்குடன் இருந்து அடுத்த தேர்தலில் வழிநடத்துவார் என்பது எங்களுக்குப் பெரும் ஊக்கத்தைத் தருகிறது”, என்றவர் கூறினார்.

கடந்த வாரம் அன்வார் நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பக்காத்தான் கூட்டணிக்கு மக்கள் காண்பித்த ஆதரவு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது என்றாரவர்.

“சென்றவிடமெல்லாம் மாபெரும் கூட்டம்.”

தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறலாம் என்பது ஹட்டாவின் கணிப்பு. 

இதனிடையே பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், தீர்ப்பைத் தொடர்ந்து தேர்தல்கள் விரைவில் நடைபெறலாம் என்பதால் கட்சித் தொண்டர்கள் இனி தேர்தல் பரப்புரைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அம்னோவுக்குச் சொந்தமான ஊடகங்கள்,  நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி நஜிப்பின் தோற்றத்தை உயர்த்திக் காண்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் துவான் இப்ராகிம் கூறினார்.