அன்வார் தீர்ப்பு: முறையீடு செய்வதற்கு முன்னர் தீர்ப்பை அரசு தரப்பு ஆய்வு செய்யும்

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்து கொள்வதா இல்லையா என்பதை அரசு தரப்பு உடனடியாக முடிவு செய்யவில்லை.

அந்தத் தீர்ப்பின் விளைவுகளைத் தாங்கள் விவாதிக்கப் போவதாக பதவி விலகிச் செல்லும் சொலிஸிட்டர் ஜெனரல்  II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் மலேசியாகினியிடம் கூறினார்.

“ஆய்வு செய்வதற்கு அரசு தரப்புக்கு முதலில் தீர்ப்பு வாசகம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் சொன்னார்.

அன்வாருக்கு எதிரான அந்த வழக்கில் பல மூத்த டிபிபி என்ற அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்கு யூசோப் தலைமை ஏற்றிருந்தார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா, டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்த பின்னர் அன்வாரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார். அந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு அவர் ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். ஏற்கனவே அரசு தரப்பு தனது வாதங்களை எடுத்துரைத்த போது அவர் அந்த ஆதாரத்தை அனுமதித்தார்.

அரசாங்கம் நியமித்த இரசாயன நிபுணர்களான டாக்டர் சியா லே ஹொங், நோர் அய்டோரா சாடோன் ஆகியோரது சாட்சியங்களை ஏற்றுக் கொண்ட போதிலும் அன்வார் தரப்பு வழங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு நிபுணர்களுடைய சாட்சியத்தை செவிமடுத்த பின்னர் அவற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகத் தோன்றுகிறது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பு முறையீடு செய்து கொள்ளாது எனத் தாம் நம்புவதாக வழக்குரைஞர் கர்பால் சிங் கூறினார்.

தாம் இதுவரை கையாண்டுள்ள வழக்குகளில் மிகவும் கடுமையானதாக இந்த வழக்கு இருந்ததாக வருணித்த கர்பால், அன்வார் குற்றமற்றவர் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்த வழக்கில் முறையீடு செய்து கொள்ள வேண்டாம் என நாங்கள் சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறோம். முறையீடு செய்வதற்கு இப்போது இது பொருத்தமான வழக்கு அல்ல.”

“இது நீதிமன்றம் வழங்கிய கண்டுபிடிப்பாகும். அத்துடன் அந்த விவகாரம் நின்று விட வேண்டும் என நான் கருதுகிறேன். அன்வார் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டார். அவரது குடும்பமும் அதிர்ச்சியில் இன்னல்களை அனுபவித்து விட்டது. அவர்கள் அப்படியே விடப்பட வேண்டும்.  இது பிரதிவாதித் தரப்புக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் கிடைத்த பெரிய வெற்றி ஆகும்.”

பொதுத் தேர்தல் நெருங்குவதால் நமது கவனம் பெரிதாக இருக்க வேண்டும். அடுத்த பிரதமராக புத்ராஜெயாவில் அன்வார் பொறுப்பேற்பது மீது கவனம் இருக்க வேண்டும் என்றும் கர்பால் சொன்னார்.

கர்பாலைத் தவிர்த்து பிரதிவாதித் தரப்பில் பரம் குமாரஸ்வாமி, சிவி பிரபாகரன், சங்கர நாயர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.