‘பக்காத்தான் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’

பக்காத்தான் ராக்யாட் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் “தனது விருப்பம் போல் வெளியிட்ட தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக” பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க  வேண்டும்.

இவ்வாறு கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யுவான் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பக்காத்தான் ராக்யாட் வெளியிட்ட கருத்துக்கள் இன்று காலை வழங்கப்பட்ட ‘குற்றவாளி அல்ல’ என்னும் தீர்ப்பு தவறானவை என்பதைக்  காட்டி விட்டதாக அவர் சொன்னார்.

“ஆகவே மன்னிப்புக் கோருவது தான் நியாயமானது. காரணம் நீதித் துறைக்கு எதிராகவும் அரசாங்கம் நீதி நடைமுறைகளில் தில்லுமுல்லு செய்வதாகவும் குற்றச்சாட்டுக்களை ஜோடிப்பதாகவும் அன்வாருடைய வாழ்க்கைக்கு முடிவு கட்ட விரும்புவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் தங்கள் விருப்பம் போல் தவறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.”

கெரக்கான் கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மீதான மத்தியப் பிரிவின் தலைவரும் ஆவார். அன்வார் விடுதலை செய்யப்பட்டுள்ளது, நீதித் துறை சுதந்திரமாக இயங்குவதையும் பக்காத்தான் தலைவர்கள் கூறிக் கொள்வதைப் போல நிர்வாகத்தின் விரிவு அல்ல என்பதையும் காட்டுகின்றது என சாங் மேலும் சொன்னார்.