பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாயகம் திரும்பியிருக்கிறார்
பிரதமரையும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பிற்பகல் மணி 2.40க்கு சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.
தென்னாப்பிரிக்காவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் 100வது ஆண்டு நிறைவை ஒட்டி கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த 46 நாடுகளின் தேசியத் தலைவர்களில் நஜிப்பும் ஒருவர் ஆவார்.
அந்தக் கொண்டாட்டங்கள் ஜோஹானஸ்பர்க்-கிலிருந்து ஐந்து மணி நேரம் காரில் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் உள்ள Bloemfontein, Mangaung-ல் நேற்று நடைபெற்றன.
தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா-வின் அழைப்பை ஏற்று நஜிப் அங்கு சென்றார்.
இன ஒதுக்கல் கொள்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவை விடுவிப்பதற்கு போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு மலேசியா வழங்கிய ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது அமைந்திருந்தது. 1994ம் ஆண்டு இன ஒதுக்கல் கொள்கை அந்த நாட்டில் முடிவுக்கு வந்தது.
தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலீல் உட்பட பல பெருமக்கள் நஜிப்பை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பெர்னாமா