சைபுல் ஆதரவுப் பேரணி பிசுபிசுத்தது

உயர் நீதிமன்றம் இன்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கிய போது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் குதப்புணர்ச்சி வழக்கு IIல் புகார்தாரரான சைபுல் புஹாரி முகமட் அஸ்லானுக்கு ஆதரவாக 50 பேர் மட்டுமே கூடியிருந்தனர்.

அவர்களுக்கு பெர்மாஸ் என அழைக்கப்படும் Pertubuhan Permufakatan Majlis Ayahanda Malaysia அமைப்பின் தலைமைச் செயலாளர் சுல்கிப்லி ஷரீப் தலைமை ஏற்றிருந்தார்.

அவர் ஏற்கனவே கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் அன்வார் ஆதரவு 901 பேரணிக்குப் போட்டியாக 5,000 பேர் கலந்து கொள்ளும் போட்டிப் பேரணியை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா அதில் பங்கு கொள்ளும் என வாக்குறுதி அளித்திருந்த அதன் தலைவர் இப்ராஹிம் அலி அந்த இடத்தில் எங்குமே காணப்படவில்லை.

பெர்மாஸ், 15 அரசு சாரா அமைப்புக்களுக்குத் தலைமை தாங்கி அந்தப் பேரணியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

சைபுல் ஆதரவாளர்கள் 300 மீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற போது அவர்களுக்கும் அன்வார் ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.

சைபுல் ஆதரவாளர்கள் “கட்டுப்பாடற்ற செக்ஸ் 901 எதிர்ப்பு” சுலோகம் எழுதப்பட்ட மஞ்சள் நிற சட்டைகளை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் ‘அன்வாரை நிராகரியுங்கள்’ ‘சட்ட முறையையும் அமைப்பையும் பாதுகாக்கவும்’ ‘குதப்புணர்ச்சியாளர் இன்னும் குதப்புணர்ச்சியாளரே’ எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அந்தப் பதாதைகள் அருகில் இருந்த அன்வார் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.

பதாதைகளுக்கான தடைகள் உட்பட பல்வேறு நிபந்தனைகளைப் போலீசார் ஏற்கனவே இரண்டு பேரணிகளுக்கும் விதித்திருந்தனர்.

அன்வார் ஆதரவாளர்கள் அந்தப் பதாதைகளைப் பறிக்க முயன்ற போது கைகலப்பு ஏற்பட்டது. அந்தக் குழப்பத்தில் பலர் தரையில் விழுந்தனர்.

உயர் நீதிமன்றம் அன்வாரை காலை மணி 9.26க்கு விடுவிப்பதற்கு முன்னர் உணவுக் கடைத் தொகுதி ஒன்றில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

“திரும்பிப் போகுமாறு” அன்வார் ஆதரவாளர்கள் சைபுல் ஆதரவாளர்களை நோக்கிக் கூச்சலிட்டனர். இறுதியில் சைபுல் ஆதரவாளர்களை பள்ளிவாசல் பகுதிக்குள் பின்வாங்கச் செய்வதிலும் அவர்கள் வெற்றி கண்டனர்.

பின்னர் போலீஸ் தலையிட்டு பள்ளிவாசல் நுழைவாயில் கதவுகளை மூடினர். அன்வார் ஆதரவாளர்கள் சுலோகங்களை முழங்குவதையும் தடுத்தனர்.