மலேசியா யாருக்குச் சொந்தம்?

கி.சீலதாஸ் – மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன் அமைப்புக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட போதிலும் அதன் மீதான எதிர்ப்பு வலுவடைந்தது.

அந்த மலாயன் யூனியன் அமைப்பை எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தவர் டத்தோ ஓன் ஜஃபார். அந்த எதிர்ப்பு இயக்கம் ஜொகூர் அரண்மனையில் வடிவம் கண்டது.

1946ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மலாயன் யூனியன் ஆயுள் குறுகியதாகவே இருந்தது. 31 ஜனவரி 1948இல் அது கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக மலாயா கூட்டரசு அமைக்கப்பட்டது.

மலாயன் யூனியன் கலைக்கப்பட்டு மலாயா கூட்டரசு அமைவதற்கான ஒப்பந்தம் காணப்பட்டபோது அந்தப் பேச்சுவார்த்தையில் பிரிட்டன், மலாய் சுல்தான்கள், அம்னோ ஆகிய மூன்று தரப்பினர் மட்டும் பேசி ஒரு முடிவுக்கு வந்தன.

மலாயாவில் வாழும் மற்ற குடிமக்களின் பாதுகாப்பு, அவர்களின் விருப்பம், அவர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், மலாயன் யூனியனை மலாயா இந்தியர் காங்கிரஸ் எதிர்த்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில், மலாயா கூட்டரசு அமைக்கப்படும் உரையாடலில் சீன, இந்தியப் பிரதிநிதித்துவம் சேர்த்துக் கொள்ளாததை அது கண்டித்தது.

அம்னோ மலாய்க்காரர்களின் நலனில் கவனத்தைச் செலுத்தியது. மலாய்க்காரர் அல்லாதாரின் நலனைப் பற்றி எந்தத் தரப்பினரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

மலாய்க்காரர் அல்லாதார் தங்களின் பாதுகாப்பு பற்றி கவனம் குறைந்து காணப்படுவதை வெளிப்படுத்தியப் போதிலும் பிரிட்டன், மலாய் சுல்தான்கள், அம்னோ ஆகியோர் யாதொரு கரிசனம் கொண்டிருந்ததாகச் சான்றுகள் காண முடியவில்லை.

ஆனால், இந்த மலாயா கூட்டரசு அமைப்பானது மலாயாவின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக விளங்கும் என்ற அறிவிப்பு பிரிட்டனின் காலனித்துவ துறையைச் சிந்தனையில் ஆழ்த்தியது. காரணம், மலாயாவின் பொருளாதாரச் செழுமைக்கு அடித்தளமாக விளங்குவது சீனர்களும் இந்தியர்களும்.

எனவே, அவர்களின் பிரதிநிதிப்பு இல்லாமல் மலாயாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டால் பர்மா (இப்பொழுது மியான்மார்), சைகோன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இனவாதக் கலவரம் ஏற்படுமானால் பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா உட்பட, மலாயாவில் செய்திருக்கும் முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்காது.

அதோடு, கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதமும் கவனத்தில் கொள்ளும்போது மலாயாவின் சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு இருக்குமெனச் சொல்ல முடியாது. மலாயாவில் வாழும் எல்லா இனத்தவர்களும் இணைந்து சுதந்திரத்துக்கு உத்திரவாதம் தருவார்களேயானால் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்குப் பாதுகாப்பு இருக்கும். இதுதான் சாலச் சிறந்தது.

எனவே, மலாய், சீன, இந்தியச் சமுதாயங்கள் இணைந்து சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு நல்குவார்களேயானால் எல்லோரும் பாதுகாப்புடன் வாழ முடியும். வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கும் பாதுகாப்பு இருக்கும். இன ஒற்றுமை, அதோடு இணையும் அரசியல் ஒற்றுமை போன்றவை நாட்டிற்குப் பாதுகாப்பாக இருக்குமென நம்பப்பட்டது.

இந்த உண்மை டத்தோ ஓனுக்குத் தெளிவானதும் அவர் மலாய்க்காரர்கள் மட்டும் மலாயாவின் கோருவதை விடுத்து மலாயாவில் வாழும் எல்லா இனத்தவர்கள் ஒட்டுமொத்த கோரிக்கையை மலாயா கூட்டரசுக்கான சுதந்திரக் கோரிக்கையை விரும்பினார்.

அம்னோ மலாய்க்காரர்களை மட்டுமல்லாது பிற இனத்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இது கைகூடாததால் அம்னோவை விட்டு வெளியேறினார்.

அவருக்குப் பிறகு, அம்னோவின் தலைமையை ஏற்றவர் துங்கு அப்துல் ரஹ்மான். இவர் ஓன் ஜஃபாரின் எல்லா இனத்தவர்களும் இணைந்து சுதந்திரம் கோர வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாரா என்பதும் பெரும் கேள்வியே. காரணம், அம்னோவும் மலாய்க்கார சுல்தான்களும் மலாயாவின் சுதத்நிரப் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றால் போதும் என்ற நோக்கம் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட ஓர் எண்ணம் எழுவதற்குக் காரணம் மலாயன் யூனியன் கலைப்பு, மலாயா கூட்டரசு அமைப்பு. அம்னோ மலாயா சுல்தான்கள் பிரிட்டனுடன் உரையாடி கண்ட சுமூகமான சூழ்நிலை மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பொருந்தும் என நினைத்து இருக்கலாம்.

அது நடைபெறவில்லை. இதற்குக் காரணம் பிரிட்டனின் மனமாற்றம்தான் காரணம் என்று கருதப்படுதுகிறது.

அடுத்து, மலாயா அமைப்பு. மலாயா கூட்டரசு, சிங்கப்பூர், புருணாய், வட போர்னியோ (இப்பொழுது சபா) சரவாக் ஆகிய நாடுகள் மலேசியாவில் இணைவது என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது அதன் வலிமை, அதன் எதிர்காலம் எப்படி எல்லாம் இருக்குமென விளக்கப்பட்டது. இறுதியில், புருணை சேரவில்லை. 16.09.1963இல் மலேசியா ஒரு கூட்டுப் பேரரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அது அமைக்கப்படுவதை எதிர்த்த நாடுகளில் இந்தோனேஷியாவும் பிலிப்பீன்ஸும் அடங்கும்.

மலேசியா எல்லா மலேசியர்களுக்கும் சொந்தமானது என்று மலாயா தீபகற்ப தலைவர்களும் உறுதிப்படுத்தினர். பிரச்சினைகள் எழுந்தன. மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் விலகிக் கொண்டது. (வெளியேற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டது).

இன்று மலேசியாவில் மலாயா கூட்டரசு, சபா, சரவாக் ஆகிய நாடுகள் நிலைத்திருக்கின்றன. ஆனால், சில அரசியல்வாதிகள் மலேசிய மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் சொந்தம் எனப் பேசக்கூடாது என்கிறார் முன்னாள் மலேசிய அமைச்சரும், முன்னாள் அமெரிக்காவுக்கான மலேசியாவின் தூதருமான டத்தோ ஶ்ரீ முகம்மது நஸ்ரி அப்துல் அசிஸ்.

மலேசியா பல இனங்களையும், பல சமயங்களையும் கொண்ட நாடு என்பதை வலியுறுத்தினார். அதோடு மலேசியா எனும்போது சபா, சரவாக் மக்களிடம் மலேசியா என்ற உணர்வு மிகுந்து காணப்படுவதாகக் கூறினார். ஆனால், தீபகற்ப மலாய்க்காரர்கள் மலேசியத் தேசியத்திற்கு முக்கியத்துவம் தராமல் இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார்.

தேர்தல் காலங்களில் தான் மலேசியர்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். குறிப்பாக, மலாய்க்காரர் அல்லாதாரின் வாக்குகளைப் பெறும் பொருட்டு இவ்வாறு பேசப்படுகிறது என்கிறார். மலேசியா யாருக்குச் சொந்தம் என்பதற்கான தெளிவான விளக்கத்திற்கு இவர் கூறும் காரணம் போதாதா?

மலாயா கூட்டரசு பின்னர் மலேசியா பல இனங்களின் ஒற்றுமையைக் கொண்ட நாடுகளாகும். அவை அமைவதற்குக் காரணங்கள், உறுதிமொழிகள் அனைத்தும் பாதுகாத்து, மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. அன்றைய தூரநோக்கு இன்று ஆபத்தான, குறுகிய இன, சமய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நாட்டு ஒற்றுமையைக் கெடுத்துவிடும்.

இப்பொழுது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் கூட இனத்தையும் சமயத்தையும் அரசியலாக்க வேண்டாம் என்பது மலேசியாவின் நீண்ட கால வாழ்வைக் குறைத்துவிடும் என்ற அச்சத்தை நீக்காது.

அதே சமயத்தில், பிரிவினை, வாதம் துளிர்விடுவதை நாடு கண்டு கொள்ளாமல் செயல்பட்டால் நாட்டு ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்க வேறு சக்திகள் தேவையில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.