கி.சீலதாஸ் – மலேசியாவில் பல இனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களோடு அவர்களின் மொழிகளும், சமயங்களும், பண்பாடுகளும், மாறுபட்ட வாழ்க்கை முறைகள் யாவும் மலேசியர்களிடையே காணப்படும் அற்புதங்கள் எனப் பெருமையுடன் பறைசாற்றிய காலம் ஒன்று இருந்தது.
அது வெகு தொலைவான காலத்தில் நடந்த அனுபவம் அல்ல; சமீப காலம் வரை நீடித்த பண்பான, பல்லின உறவு முறையாகும்.
அது ஒரு பொற்காலம்
அதை இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிடும்போது வேதனையாக இருக்கிறது.
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அக்ஸ்ஃபோர்ட் (Oxford) தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது மலேசியாவில் மலேசியர்களிடையே நிலவும் நட்பு, புரிந்துணர்வு போன்றவற்றைப் பற்றி விளக்கும்போது, இந்த நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் இன ஒற்றுமையானதானது இன ஒற்றுமை ஆய்வு கூடம் என்றேன்.
பிற நாடுகளும் அதைப் பின்பற்றலாம் என்று பெருமிதத்துடன் சொன்னவன் நான். அது உண்மையான நிலவரம்தானா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் எனப் பிறகு உணர்ந்தேன்.
நான் சட்டப்படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் மலேசியாவின் அரசியலில் பெருத்த மாற்றம் காணப்படவில்லை. காலஞ்சென்ற துன் உசேன் ஓன் தான் பிரதமர்.இவரின் தந்தை டத்தோ ஓன் பின் ஜஃபார் தான் அம்னோவை உருவாக்கியவர். மலாய்க்காரர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அம்னோவை மாற்றி எல்லா மலாய்க்காரர் அல்லாதார் இணைந்து சுதந்திரம் கோர வேண்டுமென வலியுறுத்தியவர். இந்த நிகழ்வைப் பற்றி முன்பே கூறியுள்ளேன். (காண்க: மலேசியா யாருக்குச் சொந்தம்?)
உசேன் ஓன் பிரதமராக இருந்த காலத்தில் அவர் ஶ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்தார். அந்தத் தொகுதியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தேன். இதற்குக் காரணம் அப்போது உசேன் ஓனின் அரசியல் செயலாளராகப் பணியாற்றியவர் காலஞ்சென்ற டத்தோ முஸ்தாபா முகம்மது. இவருடைய முன்னோர்கள் தான் பத்து பகாட்டில் உள்ள பாரீட் ராஜாவை உருவாக்கினர் என்பது வரலாறு.
அவரின் உறவினர்கள் பெரும்பாலும் அம்னோவில் இருந்தனர். அவர்களின் குடும்பச் சட்ட விவகாரங்களை நான் அப்போது சார்ந்திருந்த சட்ட நிறுவனம் கவனித்துக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் காலங்காலமாகப் பழக்கப்பட்டுப் போன இன ஒற்றுமைக்கு யாதொரு பகிரங்க சவால் இருந்ததாகத் தெரியவில்லை.
மகாதீர் பிரதமரானார்
உசேன் ஓன் ஓய்வு பெற்றதும் துன் மகாதீர் பிரதமரானார். நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், துன் உசேன் ஓன் ஆகிய தலைவர்கள் சொல்லிலும் செயலிலும் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் இன, சமய ஒற்றுமையைக் குலைக்கும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. துன் ரசாக் பிரதமராக இருந்த போதிலும் அவரின் இன, சமய ஒற்றுமையைப் பற்றிய நிலைபாடு எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.
துன் மகாதீரின் அரசியல் போக்கு பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் காலப்போக்கில் அது முன்னாள் பிரதமர்கள் மேற்கொண்ட கொள்கைகளுக்கு மாறுபட்டதாக வடிவம் பெற்றதை நாடு காணத் தொடங்கியது.
இதற்குத் துணையாக இருந்தவர் இன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் என்று கூறப்படுகிறது. எண்பதுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி வாழ்க்கை முறை யாவும் சமயச் சாயல் கொண்டிருந்ததை எல்லா மலேசியர்களும் உணரவில்லை.
ஶ்ரீ காடிங் அம்னோவின் சட்ட ஆலோசகர் என்ற பொறுப்பானது அவர்களின் அரசியல் நடவடிக்கையைப் பற்றியதாக இருக்கவில்லை. மாறாக, அந்தத் தொகுதி அம்னோ மீது யாராவது சட்ட நடவடிக்கை எடுத்தால் அதைக் குறித்து சட்ட விளக்கம் தருவதோடு நின்றுவிடும்.
தனிப்பட்ட முறையில் ஶ்ரீகாடிங் அம்னோ தலைவர்களுடன் நல்ல நட்புறவு இருந்தது. அத்தொகுதியின் தலைவரும், ஜொகூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் டான் ஶ்ரீ அப்துல் அஸிஸ், என் நண்பர். அவர் காலமாகும் வரை எங்கள் நட்பு நீடித்திருந்தது.
இந்த நெடுங்கால அம்னோ தலைவர்கள் யாவரும் கட்சிக்கான புது கொள்கையைச் செப்பனிடும் மகாதீரின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும் பழைய இன, சமய நல்லிணக்கத்தில் மிகுந்த கரிசனம் கொண்டவர்களாகவே இருந்தனர் என்று சொல்லலாம்.
ஆனால், மகாதீரின் நோக்கம் படிப்படியாக மலேசியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதாகும்.
அவரின் இந்த எண்ணம் பகிரங்கப்படுத்தப்பட்டதும் முன்னாள் பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மானும் துன் உசேனும் மகாதீரின் கூற்றை மறுத்தனர். ஆனால், அவர்கள் அதிகாரத்தில் இல்லாத போது அவர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்க மறுத்தவர்களைக் காண்கிறோம்.
அரசியல் அதிகாரம்
அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர் கையே ஓங்கியிருக்கும். அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது கட்சி உறுப்பினர்களின் கடமை அல்லவா என்ற நிலை ஏற்பட்டபோது இன, சமய நல்லிணக்கத்தின் வலிமை தளர ஆரம்பித்தது. இந்தத் தளர்வு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. மகாதீரை அம்னோவின் மற்ற தலைவர்கள் மட்டும்தான் ஆதரித்தார்களா? கிடையாது! பலர் வாய் மூடிக் கொண்டிருந்ததும் அதிசயமே!
இப்படிப்பட சூழ்நிலையில்தான் அக்ஸ்ஃபோர்ட் தமிழ்க்கல்வி விழாவில் பேசும் போது பிற நாடுகள் மலேசியாவின் மாதிரியைப் பின்பற்றலாம் என்றேன்! அது தவறான கருத்து என்பதை அறிந்ததும் அக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் மலேசியாவின் நிலைபாடு மாறிவிட்டத்தைக் குறிப்பிட்டதோடு சிறுபான்மையினரின் சங்கடத்தையும் வெளியிட்டேன்.
அடுத்து, ஒரு முக்கியமான வழக்கில் ஜொகூர் மாநில அரசு வழக்குரைஞரும் நானும் விவாதித்துவிட்டு, நீதிமன்றத்தை விட்டுப் புறப்படும் போது தேநீர் அருந்தலாமா என்று நான் வினவியபோது, “எங்கு போவோம்?” என்பது அவரின் கேள்வி. நீதிமன்றத்தின் அருகாமையில் இருக்கும் சீனர் ஒருவர் நடத்தும் கடையைக் குறிப்பிட்டேன். அவரின் கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “நமக்குப் பொருந்துமா?” என்பதே அவரின் வினா.
“என்னோடு வந்து பாருங்கள். அங்கே பெரும்பாலும் மலாய்க்காரர்கள்தான் வாடிக்கையாளர்கள்” என்று சொல்லி அழைத்துச் சென்றேன் நான். சொன்னது போலவே அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் என் நண்பரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடையை நடத்துபவர் சீனர்.
அங்கே கூடியிருந்த மலாய்க்கார வாடிக்கையாளர்கள் சீனக் கடை உரிமையாளரிடம் நட்புடன் பழகியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அரசு வழக்குரைஞரின் சந்தேகத்திற்கான காரணம் என்ன?
மலேசியக் கல்வி
முறைமலேசியக் கல்வி முறையில் காணப்பட்ட மாற்றம் பல்லின கலாச்சாரத்தை ஏற்க மறுக்கும் குணத்தை வெளிப்படுத்துகிறது. நான் பிறந்து, வளர்ந்த நாட்டில் இது வேதனை தரும் மாற்றமாக அமைந்திருந்தது.
இன்று நாட்டின் இன, சமய சூழ்நிலை எப்படி இருக்கிறது? மாநில ஆளுநர்களும், மாமன்னரும் மற்றும் பிரதமரும் இன, சமய ஒற்றுமையை வலியுறுத்துகின்றனர். இதைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துவிட்டது சிலரின் இன, சமயத்துவேஷ நடவடிக்கைகள்.
சட்டம் எல்லா தீயச் செயல்களையும் கண்டிக்கும் என்பது உண்மை. ஆனால், ஒரு சிலரின் மனநிலை எப்படி இருக்கிறது? இந்த அவலநிலைக்குக் காரணம் என்ன?
மகாதீரின் பிரதமர் காலத்தில் ஆரம்பித்த கல்வி முறை இன, சமய ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த தரத்தைக் கொண்டிருந்தது என்பதை உணர்ந்து ஒற்றுமையைக் காணும் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.
அது பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அவற்றில் இன்று சிறுபான்மையினரின் சமயங்களைக் கேலி செய்வது, சிறுமைப்படுத்துவது பரவி வருகிறது. அது பேச்சுரிமை என்று சொல்லப்படுகிறது. அது தவறான கருத்து என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
பிற சமயங்களை, அவற்றின் வழிமுறைகளை, சம்பிரதாயங்களைக் கேலி செய்வது, இழிவுப்படுத்துவது ஒரு சமயத்தைத் தற்காக்கும் செயல் என்கின்ற வாதம் அறிவுடையது அல்ல என்று கூற தயக்கம் ஏன்? இதை எல்லா சமயத்தினரும் உணர வேண்டும்.
இன, சமய ஒற்றுமை
இன, சமய ஒற்றுமையை எல்லா மலேசியர்களாலும் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களால் மட்டும்தான் அந்த ஒற்றுமை நிலையை அடைய முடியும். சமய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் காட்டப்படும் கரிசனம் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க உதவாது.
இந்த உண்மையை அரசு உணர வேண்டும். சமய விஷயங்களில் பொறுமை தேவை. பொறுமை ஒற்றுமையை வளர்க்கும் என்றாலும் அது ஒரு தரப்பினர் மட்டும் பின்பற்ற வேண்டிய கலாச்சாரம் என்பது தவறான அணுகுமுறையாகும். அது நாட்டின் சுபிட்சத்திற்கு உதவாத நிலை. அதைத் தவிர்க்க வேண்டும். இதுதான் மலேசியாவில் காணாமல் போன இன நல்லிணக்கத்தை உயிர்ப்பிக்கும்.