இராகவன் கருப்பையா – தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது என்று சிந்திப்பது மிகவும் அவசியமாகும்.
நம் உரிமைகளை தட்டிக் கேட்பது, அவற்றுக்காக போராடுவது போன்றவையெல்லாம் ஒருபுறமிருக்க, அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சக்திகளுக்கு எதிராக முட்டி மோத நாம் தயாராக வேண்டுமானால், தர்மமும் நியாயமும் நம் பக்கம் இருப்பதை உறுதி படுத்த வேண்டும். மாறாக செயல்படும் போது, அது சிக்கலான போராட்டமாக மாறும் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்நாட்டில் இந்து ஆலயங்கள் தொடர்பான நிறைய விஷயங்களில் நம்மை நாம் முதலில் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நாடலாவிய நிலையில் அனைத்து மதங்களையும் உட்படுத்திய நம் சமூகத்தின் மக்கள் தொகை 7 விழுக்காட்டுக்கும் குறைவு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் இன விகிதாச்சாரப்படி பார்த்தால் இந்து கோயில்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளன என்று கூறப்படுகிறது.
தற்போது இருக்கின்ற ஆலயங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது எனும் போதிலும், தற்சமயத்திற்கு புதிதாக எந்த ஒரு கோயிலையும் சட்டதிற்கு புறம்பாக கட்டக் கூடாது எனும் நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
முதலில், தற்போது இருக்கின்ற கோயில்களுக்கு முறையான நிலப்பட்டா போன்ற அதிகாரப்பூர்வ ஆவனங்கள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் எந்த கொம்பனும் அதனை ‘ஹராம்’ என்றோ சட்டவிரோதமான கோயில் என்றோ சொல்ல முடியாது.
அர்ச்சனைச் சீட்டு விற்பனை செய்வது உண்டியல் வழி நன்கொடை நாடுவது- அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு முறையான நிர்வாகம் அவசியமாகும்.
நாடு தழுவிய நிலையில் எண்ணற்ற ஆலயங்களின் நிர்வாகம் தற்போது ‘ஆர்.ஒ.எஸ்.’ எனப்படும் சங்கங்களுக்கான பதிவதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது நமக்குதான் அவமானம். இத்தகைய சூழல்களுக்கு நம் கோயில்களை நாம் உட்படுத்தக் கூடாது.
இது சார்பாக இந்து சங்கம் எடுத்திருக்கும் முடிவு, அதாவது அரசு கோயில்களை பதிவு செய்வதற்கான ஒரு சீரான அமைப்பை உருவாக்குவதாகும். இம்முறை செயலாக்கம் காணும் வரை இந்து சங்கம் தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
மரங்களில் திடீர் திடீரென மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினாலான துணிகளைக் கட்டி, அவற்றின் மீது பூமாலைகளை தொங்கவிட்டு, அங்கு பிறகு புதிய கோயில்களை உருவாக்கும் பழக்கத்தை முதலில் நாம் விட்டொழிக்க வேண்டும்.
யாருடைய நிலம் என்று கூட பார்க்காமல் இப்படி அசட்டுத்தனமானக் காரியங்களை செய்வது காலத்திற்கு ஒவ்வாத செயலாகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டும் என நில உரிமையாளர்கள் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளும் போது அங்கு கூடி மறியல் செய்வது, மக்கள் பிரதிநிதியை அழைத்து அவருக்கும் அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்கள் தெய்வபக்தியை சோதிப்பது போல் ஆகிவிடும்.
பிற இனத்தவர், என்றும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நம் கோயில்களை தற்போது அலைக்கழிக்கின்றனர் என்றால் அதற்கு நாம்தான் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
எனவே மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் நமக்கு வழங்கிய கசப்பான அனுபவத்தை ஒரு தன்முனைப்பாக ஏற்றுக் கொண்டு நம்மை நாமே மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்துவதே சாலச்சிறந்ததாகும்.