குடும்பத்தின் அரசியல் நிலைப்பாடு, நீண்ட பற்கள் காரணமாக 6 வருடங்களாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்

பெரும்பாலான பெரியவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பின் கசப்பான, இனிப்பு மிக்க அனுபவத்தை ஏக்கத்துடன் நினைவு கூர்ந்தாலும், சிலர் விரும்பத் தகாத அனுபவங்களால் அவ்வாறே உணராமல் இருக்கலாம்.

கெடாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கூற்றுப்படி, தான் தொடர்ந்து அனுபவித்த கொடுமைப்படுத்துதலால், தனது ஆரம்பப் பள்ளி ஆண்டுகளை நினைக்கும்போது கசப்பு மட்டுமே அவள் இதயத்தில் நிறைந்துள்ளது.

23 வயதான சித்தி நூர் ஹைஃபா, கெடாவின் கோலா மூடாவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 2009 மற்றும் 2014 க்கு இடையில் பள்ளிப்படிப்பைத் தொடங்கியபோது தனது சோதனை தொடங்கியது என்று கூறினார்.

அவள் ஏன் கொடுமைப்படுத்தப்பட்டாள்? சித்தியின் கூற்றுப்படி, பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அரசியல் சார்புகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் அதற்குக் காரணம்.

“உங்கள் ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்னிலையில் உங்கள் குடும்பத்தைக் கேலி செய்வதை கற்பனை செய்து பாருங்கள்”.

“என் குடும்பத்தின் அரசியல் சார்பு காரணமாக மற்ற மாணவர்களை என்னுடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று அவர்கள் தூண்டினர்,” என்று அவர் சமீபத்தில் மலேசியாகினியிடம் கூறினார்.

கூடுதலாக, ஆறுபேரில் ஐந்தாவது குழந்தையான சித்தி, தனது உடல் தோற்றம் காரணமாகத் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

“எனக்கு நீண்ட பற்கள் இருப்பதால் ஆசிரியர்கள் என்னைக் கேலி செய்தனர். சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் என் தலையில் தட்டினர்.”

“மற்ற குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் என்னை முட்டாள் என்றும் அழைத்தார்கள்,” என்று சிட்டி கூறினார், அவர் இப்போது உள்ளூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரியாக இருக்கிறார்.

கொடுமைப்படுத்துதலைத் தாங்க முடியாமல், தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், பின்னர் அவர்கள் நிவாரணம் கோரி பள்ளியை அணுகியதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், தனது பெற்றோரின் தலையீட்டால் ஆசிரியர்கள் கோபமடைந்ததாகவும், இதன் விளைவாகத் தான் மேலும் குறிவைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“சுருக்கமா சொன்னா, என் பெற்றோர் பொறுமையா இருந்து பொறுத்துக்கணும்னு சொன்னாங்க”.

.”நான் இடமாற்றத்தை வலியுறுத்தினால், பள்ளி வெகுதொலைவில் இருக்கும், அது என் குடும்பத்திற்கு சிரமத்தை உருவாக்கும்,” என்று அவர் புலம்பினார்.

ஆசிரியர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதால், மற்ற மாணவர்களும் தன்னிடம் இதேபோல் நடந்து கொள்ளத் துணிந்ததாகவும், சிலர் அதை வெளிப்படையாகச் செய்வதாலும், தான் உதவியற்றவளாக உணரப்படுவதாகவும் சித்தி கூறினார்.

“ஆசிரியர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லாததால், மற்ற மாணவர்கள் என்னைத் துணிச்சலுடன் குற்றம் சாட்டத் தொடங்கினர். நான் அடிக்கடி புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன்”.

“இன்று வரை, எனக்கு இன்னும் அதைப் பற்றிய கனவுகள் வருகின்றன, ஆனால் கடந்த காலங்களைப் போல அடிக்கடி இல்லை,” என்று அவர் கூறினார்.

“தன்னைத் தவிர, தனது மூத்த சகோதரியும் அதே பள்ளியில் படித்ததாகவும், அதே அனுபவத்தைப் பெற்றதாகவும் சித்தி மேலும் கூறினார்”.

பல வருட துஷ்பிரயோகத்திற்குப் பிறகும், தான் இன்னும் கசப்பாக இருப்பதாகவும், தனது பழைய பள்ளிக்குச் செல்லும் எண்ணமே வெறுப்பாக இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

“எனக்கு அறிவைப் போதித்த ஆசிரியர்களுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் என்னை நினைவுபடுத்திக் கொள்ள முயற்சித்தாலும், நான் இன்னும் பழிவாங்கும் எண்ணத்துடன் இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்”.

“மன வேதனையைக் குணப்படுத்துவது எளிதல்ல,” என்று சித்தி கூறினார்.