பேரிடர் உதவிக்காகச் சிலாங்கூருக்கு மத்திய அரசு ரிம14.7 மில்லியன் நிதியை வழங்குகிறது

மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Disaster Management Agency) மூலம், 2025 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அரசாங்கத்திற்கு ரிம 14.7 மில்லியன் பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு, பந்துவான் வாங் இஹ்சானில் (BWI) பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் ரிம 1,000 வழங்கவும், BWI கெமாடியனில் உயிர் இழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ரிம 10,000 வழங்கவும் பயன்படுத்தப்படும் என்று நட்மா இயக்குநர் ஜெனரல் கைருல் ஷாரில் இட்ரஸ் தெரிவித்தார்.

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உதவி பொருந்தும் என்று அவர் கூறினார்.

“மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவாகப் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம், சமூக நலத் துறையில் பதிவுசெய்யப்பட்ட வீட்டுத் தலைவர்களின் பட்டியலின் அடிப்படையில் உதவிகளை விநியோகிக்கும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைருல் (மேலே) அறிகையின் படி, வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரிம 10,000 ரொக்க உதவியும் கிடைக்கும், இதில் மத்திய அரசிடமிருந்து ரிம 5,000 மற்றும் பெட்ரோனாஸிலிருந்து மற்றொரு ரிம 5,000 அடங்கும்.

“பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு, உரிமையாளர்களுக்கு ரிம 5,000 கிடைக்கும், இதில் மத்திய அரசிடமிருந்து ரிம 2,500 மற்றும் பெட்ரோனாஸிடமிருந்து ரிம 2,500 அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகள் பழுதுபார்க்கப்படும்போது அல்லது மீண்டும் கட்டப்படும்போது தற்காலிக வீடுகளைப் பெறுவதற்கு உதவும் வகையில், சிலாங்கூர் அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு மாதாந்திர வாடகை உதவியாக ரிம 2,000 வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“புத்ரா ஹைட்ஸில் பேரிடர் பாதிக்கப்பட்டவர்கள்மீது மடானி அரசாங்கத்தின் அக்கறையை இந்த ஒதுக்கீடு பிரதிபலிக்கிறது. சீரான விநியோகத்தை உறுதி செய்ய, அனைத்து உதவிகளும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுமூலம் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில், 30 மீட்டர் உயரத்திற்கு மேல் தீப்பிழம்புகள் பரவின, வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்தனர்.