இராகவன் கருப்பையா – நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.
தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம், ஆகிய 3 நிகழ்வுகளும் நம் நாட்டின் பல்லின சமூகங்களுக்கிடையிலான இணக்கப் போக்கிற்கு ஒரு சோதனை களமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.
இம்மூன்று நிகழ்வுகளிலுமே பொது மக்களின் நிலைப்பாடு என்ன, அரசியல்வாதிகளின் நோக்கம் யாது, போன்ற விவரங்கள் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
பத்ரகாளியம்மன் கோயில் விவகாரத்தில் எந்த அளவுக்கு அரசியல் திணிக்கப்பட்டு, பொது மக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது எல்லாருக்கும் தெரியும்.
கடைசியில் அரசியல் ஆதிக்கமும் அதிகார வர்க்கமும்தான் வெற்றி பெற்று, ‘சுமூகம்’ எனும் பெயரில் தீர்வு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.எனினும் அதற்கு அடுத்த வாரத்தில் அனுசரிக்கப்பட்ட நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் போது சாமானிய மக்கள்தான் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணி அதில் வெற்றியும் பெற்றனர் என்று கூறலாம்.
என்றும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டின் கொண்டாட்டங்களில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் நிறைய அம்சங்கள் காணப்பட்டன.
பல்லின கலாச்சாரங்களை ஒற்றுமையாக பிரதிபலிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட காணெளிகள் மற்றும் புதிய பாடல்கள் மட்டுமின்றி, ‘டிராமா’ அல்லாத இயல்பான இணக்கப் போக்குடன் முஸ்லிம்களும் இதர சமயத்தினரும் பல வகையில் அன்பை பரிமாறிக் கொண்ட செய்திகளும் படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டன.
இது, அரசியல்வாதிகளின் ஊடுருவல் இல்லாத, முற்றிலும் சாமானிய மக்களின் தன்னலமற்ற, ‘முஹிபா’ கோட்பாட்டை பிரதிபலிக்கும் முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்புப் பெருநாள் தினத்தன்றே நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தின் போது சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் அவ்வட்டாரத்தில் உள்ள 3 பள்ளிவாசல்களும் சற்றும் இன பாகுபாடின்றி, சமய வேற்றுமையின்றி மனிதநேயத்திற்கு எவ்வகையில் முக்கியத்துவம் வழங்கின என்பதையும் நாம் பார்த்தோம்.
அந்த மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர், இஸ்லாம் மதத்தினர் தொழுகை செய்வதற்கு ஆலய வளாகத்திற்குள் வசதிகள் செய்து கொடுத்தக் காட்சிகளும் கூட ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டன.
இப்படிப்பட்ட அவசரகால வேளைகளில் கூட சாமானிய மக்கள் வெளிப்படுத்திய, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமானது, பிளவை ஏற்படுத்தி வயிறு கழுவும் குறிப்பிட்ட பல அரசியல்வாதிகளுக்கு ஒரு பயங்கர சவாலாக அமைந்துவிட்டது.
அத்தகைய அரசியல்வாதிகளும் ஒரு சில தீவிர மத போதகர்களும் இது தொடர்பாக திரைமறைவில் எம்மாதிரியான விஷக் கருத்துக்களை உமிழ்ந்திருப்பார்கள் என்று தெரியாது.
இனத்திற்காகவும் மதத்திற்காகவும் போராடுவதாகக் கூறிக்கொள்வதையே ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகக் கையிலெடுக்கும் அத்தகைய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு வேதனை மிகுந்த சோதனைக்களம்தான் என்றால் அது மிகையில்லை.
‘ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்,’ எனும் அசிங்கமானப் போக்கைக் கொண்டுதானே காலங்காலமாக அவர்கள் அரசியல் நடத்துகின்றனர்!
ஆனால் சாமானிய மக்களை பொருத்த வரையில் இத்தகைய செயல்பாடுகள் குறிப்பிட்ட அந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகுட்டக் கூடிய, சாதனை மிகுந்த ஒரு மகத்தான வெற்றி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.