பிஎன்-னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா?, அப்துல் அஜிஸ் பாரி

தாம் ஜெயிலில் அடைக்கப்பட்டால் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவை நிச்சயம் கைப்பற்றும் என்று அன்வார் இப்ராஹிம் அடிக்கடி கூறியுள்ளார். அவ்வாறு நாம் சிறைக்குப் போகாவிட்டால் பக்காத்தான் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் நன்றாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

பிஎன் தங்களை முட்டாளாக்கி வருகிறது என்றும் தங்களது விவேகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கருதும் மக்களை – “அன்வார் குற்றவாளி அல்ல” என்ற நேற்றைய தீர்ப்பு பிஎன்-னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து காப்பாற்றும் முயற்சி என நம்ப வைப்பது சிரமமாகும்.

அன்வார் நடத்தை குறித்து அம்னோ தலைவர்கள் கூறி வந்த ஏளனமான சொற்களைப் பற்றி என்ன சொல்வது?

அதனால்தான் நான் சொல்கிறேன்: “குதப்புணர்ச்சி வழக்கு IIல் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு பிஎன் -னுக்கு பெரிதாக எந்த வகையிலும் உதவப் போவதில்லை.”

அந்த வழக்கு விசாரணை தொடர்பில் நிறையப் பணமும் நேரமும் செலவு செய்யப்பட்ட பின்னர் இவ்வளவு காலம் காத்திருந்ததற்கான காரணத்தை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும்.

பிஎன் -னும் நீதிமன்றங்களும் நடந்து கொள்ளும் விதம் மீது வரி செலுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

அந்தத் தீர்ப்பு என்பது உண்மையில் நீதித் துறை சுதந்திரமாக இயங்குகிறது என அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக பிஎன் -னும் நீதிபதிகளும் அதனைத்தான் சொல்லப் போகின்றனர்.

ஆனால் நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அது  சில உண்மை நிலைகளைச் சார்ந்துள்ளது. மக்கள் அதனைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஒர் ஆண்டுக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும்  பல்வேறு ஊழல்களினால் பிஎன் தோற்றம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது என்பதுமே உண்மை நிலை.

“நீதித்துறையே காரணம்”

அன்வார் வழக்கு, தேர்தல் மீது விரிவான தாக்கத்தைக் கொண்டிருப்பது திண்ணம். காரணம் அவர் எதிர்த்தரப்புத் தலைவரும் ஆவார்.

சில நிகழ்வுகள் நீதித்துறை நடைமுறைகள் மீது செல்வாக்கைப் பெற்றிருக்கலாம் என்பதை ஒரு வகையில் அந்தத் தீர்ப்பு காட்டுவதாக தோற்றமளிக்கலாம். இந்த வழக்கில் பொது மக்களுடைய ஆத்திரமும் அன்வார் ஈர்க்கும் பெருங்கூட்டமும் நேற்று நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதும் வழக்கின் முடிவுகள் மீது ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என எண்ண முடியும்.

அந்த நிலை நீதித்துறை சுதந்திரமானது என்னும் தோற்றத்துக்கு நல்லதல்ல. நீதிமன்றத்துக்கு வெளியில் நிகழும் சம்பவங்கள் முடிவுகளை நிர்ணயிக்கின்றன என்று மக்கள் கருதத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் அந்த நிலைக்கு நீதித்துறை தன்னையே சாடிக் கொள்ள வேண்டும். நேற்றைய தீர்ப்பைத் தவிர்த்து  பேராக் நெருக்கடி சம்பந்தப்பட்ட வழக்கு, பிகேஆர் எம்பி தியான் சுவா சம்பந்தப்பட்ட வழக்கு, டிஏபி எம்பி தெரெசா கோக்-கின் வழக்கு ஆகியவற்றை நீதிபதிகள் கையாண்ட முறை குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த வழக்குகள் அனைத்தும் நீதித்துறையில் பிஎன் கரங்கள் படிந்துள்ளதை காட்டுகின்றன.

——————————————————————————–
அப்துல் அஜிஸ் பேரி அரசமைப்பு நிபுணர் ஆவார். அவர் முன்பு அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.