நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன் என அன்வார் மும்பாயில் சொல்கிறார்

தமது துயரங்களுக்கு காரணமாக இருந்தவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

என்றாலும் சில ஊடகங்கள் தமக்கு எதிராக தொடர்ந்து வரும் களங்கப்படுத்தும் இயக்கம்  குறித்து கவலை கொள்வதாக அவர் சொன்னார்.

“வழக்கம் போல கடந்த காலத்தில் அனுபவித்த துயரங்களுக்காக நான் புகார் செய்யப் போவதில்லை. உண்மையில் நான் மன்னிக்கவும் கூடத் தயாராக இருக்கிறேன்”, என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் குறிப்பு ஒன்றில் கூறினார்.

“என்றாலும் அம்னோ கட்டுக்குள் உள்ள பழி வாங்கும் வெறுப்புணர்வைக் கொண்ட ஊடகங்கள் உட்பட சிறிய எண்ணிகையிலான பிடிவாதமான மக்கள் பற்றியே நான் பெரிதும் கவலைப்படுகிறேன்.”

இந்தியா, மும்பாய்க்கு நேற்றிரவு அன்வார் சென்றுள்ளார். இந்தியாவின் சுதந்தரத் தந்தையான மகாத்மா காந்தி எனப் போற்றப்படும் மோகன்தாஸ் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார்.

மக்களுக்காக ஜனநாயகத்துக்குப் போராடிய காந்தியின் உணர்வைப் பகிர்ந்து கொள்ளவும் கொடுமைகளையும் ஊழலையும் நிராகரிக்கவும் ராஜ்மோகனுடன் இருப்பதாக நான் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்,” என்றார் அவர்.

அவர் மூன்று மணி நேரம் பயணம் செய்த போது அன்வாருடைய தொலைபேசியில் ஆயிரக்கணக்கான அழைப்புக்கள் குவிந்தன. சமூக இணையத் தளங்களிலும் அவருடைய இணையத் தளத்திலும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் செய்திகள் குவிந்தன.

“ஆனால் என்னுடைய குடும்பமும் மக்களும் குறிப்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று காலையில் அனுபவித்த கவலை, துக்கம், துன்பங்கள் குறித்தே என் சிந்தனைகள் இருந்தன”, என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

அன்வார் தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி  அரசு தரப்பு வழங்கிய டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரம் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

“நான் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் எண்ணவில்லை. எதிர்பாராத அந்தத் தீர்ப்பை விளக்கவும் முயலப் போவதில்லை. என்றாலும் தீய நோக்கம் கொண்ட அந்த அவதூறிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதால் நான் அல்லாஹ்-வுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்,” என தமது குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி கூறிய அன்வார் சொன்னார்.