குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து நேற்று அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டது, இந்த நாட்டில் நிகழ்ந்து வருகின்ற “உருமாற்றங்களுக்கு” தக்க சான்று என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.
“இந்த நாட்டுக்கு சீர்திருத்தத்தையும் உருமாற்றத்தையும் கொண்டு வர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்டுள்ள உண்மையான முயற்சிகளை மலேசியர்களும் அனைத்துலக சமூகமும் உணரும் என நான் நம்புகிறேன்,” என அவர் இன்று புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
“நேற்றைய தீர்ப்பில் அதனைத் தெளிவாகக் காண முடியும்.”
நஜிப்பின் சதி எனக் கூறப்படுவதிலிருந்தும் அவரை அந்தத் தீர்ப்பு விடுவித்துள்ளது என வலியுறுத்திய முஹைடின் நீதிமன்றங்களும் நீதி பரிபாலன முறையும் அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்டிருப்பதையும் அது காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
“சில வெளிநாடுகள் உண்மை நிலையை துல்லிதமாக உணர்ந்து கொள்ளும் என நான் நம்புகிறேன். மலேசியாவில் நடப்பது எல்லாம் நீதிக்கு புறம்பானவை என அரசாங்கத்தை குறை கூறும் எதிர்க்கட்சிகளுடைய செல்வாக்கிற்குப் பலியாகி விட மாட்டா என்றும் நான் நம்புகிறேன்,” என்றார் முஹைடின்.
பெர்மாத்தாங் எம்பி-யுமான அன்வாரை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நேற்று உயர் நீதிமன்றம் விடுவித்தது பற்றி துணணப் பிரதமர் கருத்துரைத்தார்.
அன்வாருக்கு எதிரான குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கூறியது.
‘அன்வார் தீர்ப்பு நெருக்குதலை ஏற்படுத்தவில்லை’
அன்வாருக்குக் கிடைத்துள்ள விடுதலை அடுத்து வரும் தேர்தலில் தனது முயற்சிகளை அம்னோ இரட்டிப்பாக்குவதற்கு நெருக்குதல் தொடுக்குமா என முஹைடினிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர் அத்தகைய நெருக்குதல் ஏதுமில்லை என்றார்.
“யார் நெருக்குதல் கொடுக்கிறார்கள் ? நடந்தது நீதிமன்ற முடிவாகும். நாங்கள் எந்த நெருக்குதலையும் அடிப்படையாகக் கொண்டு ஆயத்தங்களைச் செய்யவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் எல்லா அலுவல்களும் வழக்கம் போல நடைபெறுகின்றன. நாங்கள் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களை யாரும் நெருக்கவில்லை.”
என்றாலும் எதிர்க்கட்சிகளுடனான அம்னோவின் போர், புதிய களங்களில், புதிய வழிகளில் நிகழ்வதை அவர் ஒப்புக் கொண்டார்.
“அது புதிய சூழ்நிலை. நாம் தயாராக இருக்க வேண்டும். உண்மையில் நாங்கள் ஆயத்த நிலையைக் காட்டிலும் மேலோங்கியுள்ளோம்.”
“நாங்கள் அவர்களை எதிர்நோக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களது வியூகங்களை வகுக்கின்றனர். நாங்களும் அவ்வாறே செய்ய வேண்டும்,” என பாகோ எம்பி-யுமான முஹைடின் சொன்னார்.