சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான், சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான புதிய ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு யோசனை கூறியுள்ளது.
அந்த மாநிலத்தில் பாஸ் கட்சியின் உயர் பதவியை வகிக்கின்றவர் என்ற முறையில் ரானியே இயற்கையான வேட்பாளர் என அந்தப் பிரிவின் துணைத் தலைவர் முகமட் சானி ஹம்ஸான் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“அத்துடன் ரானி மக்களுக்கு மிகவும் அணுக்கமானவர். மக்கள் பிரச்னைகளில் மிக்க அக்கறை உள்ளவர்,” என்றும் சானி சொன்னார்.
மருத்துவரான ரானி தற்போது மெரு சட்டமன்றத் தொகுதிக்கான பேராளரும் ஆவார். கடந்த ஜுன் மாதம் நிகழ்ந்த விரிவான தலைமைத்துவ மாற்றத்தின் கீழ் அவர் மாநில பாஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினராக ஹசான் அலிக்குப் பதில் பொறுப்பேற்க தாம் விரும்பவில்லை என ரானி வெளிப்படையாகக் கூறியுள்ளதாக இன்று சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அந்தப் பதவிக்கு வேறு யாராவது நியமிக்கப்பட்டால் நல்லது. மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் என்னும் முறையில் பொறுப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியாது என நான் அஞ்சுகிறேன்.”
என்றாலும் தாம் உட்பட அந்த பதவிக்கு நியமிக்கப்படும் எந்தத் தலைவரையும் மாநில தொடர்புக் குழு ஆதரிக்கும் என அவர் உறுதி அளித்தார்.
ஹசான் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஆட்சி மன்ற உறுப்பினரை அவரது இடத்துக்கு நியமிப்பது பற்றிய விவகாரம் தலை தூக்கியுள்ளது.
ஹசான், ஆளும் கூட்டணியில் ஒர் அங்கமாக தாம் இனிமேலும் இல்லாததால் தன்னிச்சையாக ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ஹசான் இன்னும் பதில் அளிக்கவில்லை.